பிஸ்கெட்டை உண்ணக் கொடுத்து மயக்கமுறச் செய்து வயோதிபப் பெண்களிடம் திருட்டு
வலப்பனை பகுதியில் வீதியோரத்தில் மயக்கமுற்றிருந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டு வயோதிபப் பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_71.html

வலப்பனை பகுதியில் வீதியோரத்தில் மயக்கமுற்றிருந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டு வயோதிபப் பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பெண்கள் கந்தேகெட்டிய பொலிஸ் நிலையத்தில் சிலரால் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களிடம் நேற்று வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
வயோதிபப் பெண்கள் இருவரும் 64 மற்றும் 76 வயதுடைய வலப்பனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் மேலும் இரண்டு ஆண்களுடன் வாகனமொன்றில் அனுராதபுரத்திலுள்ள உறவினர் வீடொன்றிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது பரிச்சயமான ஒருவர் அவர்களை அங்கிருந்து கண்டிநோக்கி காரில் அழைத்து வந்துள்ளார்.
இதன்போது ஒருவரால் வழங்கப்பட்ட பிஸ்கட்டை உட்கொண்ட பின்னர் வயோதிபப் பெண்கள் இருவரும் மயக்கமுற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர்களிடமிருந்த 11,000 ரூபா பணமும், தங்கமுலாம் பூசப்பட்ட நகைகள் சிலவும் திருடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்தப் பெண்களுடன் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வலப்பனை மற்றும் கந்தேகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate