விடுதலை செய்யப்படவுள்ள தமிழ் கைதிகள் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாம்!
விடுதலை செய்யப்பட உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலர் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது....


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுவித்துக் கொள்ள முயற்சிக்கும் 278 தமிழ் அரசியல் கைதிகளில் பலர் பாரிய பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்.
விமானங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர்கள், கண்ணி வெடி வைத்தமை, கடற்படை படகுகள் மீது தாக்குதல் நடத்தியமை, கிராம மக்களை படுகொலை செய்தமை, தற்கொலை குண்டுதாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, படையினரை கொலை செய்தமை, பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சிவிலியன்களை படுகொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதிகள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவர்களை அரசியல் கைதிகள் அடையாளப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது ஆபத்தானது என்ற வகையில் சில சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நீண்ட காலமாக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தாது தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்தக் கைதிகளை விடுதலை செய்வது குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று அல்லது நாளை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது..