ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல...

http://kandyskynews.blogspot.com/2015/06/15_85.html

சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அதிபர் மன்சூர் ஹாதி ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பது அரபு நாடுகளின் விருப்பம். இதற்காக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
2,800 பேர் பலி
இந்த போரில் இதுவரை 2 ஆயிரத்து 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தவிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் உயிர்ப்பலி நேரிட்டு வருகிறது.
பேச்சு வார்த்தை
போரினால் நிலை குலைந்துள்ள ஏமனில், 2 கோடியே 10 லட்சம் பேர் அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் மனித நேய உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஐ.நா. கூறுகிறது.
எனவே ஏமனில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படவேண்டும் என்பதில் ஐ.நா. சபை ஆர்வம் காட்டுகிறது. கடந்த 19–ந் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், ஐ.நா. சபை ஏற்பாட்டில் ஏமன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அதில் எந்தவொரு உடன்படிக்கையும் ஏற்படவில்லை.
2 மாகாணங்களில் தாக்குதல்
இந்த நிலையில், ஏமனில் சாடா, மாரிப் மாகாணங்களில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நேற்று முன்தினம் மாலை வான்தாக்குதல்கள் நடத்தின.
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல்களை சவுதி கூட்டுப்படைகள் நடத்தினாலும், இவற்றில் அப்பாவி பொதுமக்களில் 7 பேர் உள்பட (இவர்களில் 5 பேர் பெண்கள், 2 பேர் குழந்தைகள்) 15 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்த தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் சபா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கார் குண்டுவெடிப்பு
இந்த தாக்குதல்களுக்கு மத்தியில் ஏமன் தலைநகர் சனாவில், கிபா அல் மஹ்தி மசூதி அருகே கார் குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.