பயங்கரவாதத்தை விடவும் கொடுமையானது இனவாதம்
நாட்டில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? தேர்தல் குறித்த திகதி வெளியிடப்படுமா? தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது நெருங்க...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_89.html
நாட்டில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? தேர்தல் குறித்த திகதி வெளியிடப்படுமா? தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் களத்தில் குதிப்பார்களா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகள் எழுந்த வண்ணமுள்ளன.
நாட்டின் அரசியல் கள நிலைவரம் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் முன்னரே சூடுபிடிக்க தொடங்கியுள்ளதை இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
எப்படியாவது பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை களமிறக்கி, அவரைப் பிரதமராக்கிவிட வேண்டும் என்பதில் அவரது தீவிர ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் வரிந்து கட்டிக்கொண்டுள்ளனர்.
அதற்கேற்றாற்போல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் புதிய அரசை கடுமையாக விமர்சித்தும் பேரினவாதிகளுக்குத் தீனி போடும் வகையிலும் தமது கருத்துக்களை கூறி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
மறுபுறம், இனவாதத்தை உசுப்பிவிடும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தமது கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கூட தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஒருசில சக்திகள் திரிபுபடுத்திக் கூறி வருவதுடன், வடக்கில் மீண்டும் வன்முறைகள் தோன்றிவிட்டதாக ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி அதன்மூலம் புதிய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வகையான கருத்துக்கள் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுவது போன்று அமைந்திருப்பதாகத் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எந்த வகையிலும் நாட்டில் நல்லிணக்கம், அமைதி, இனங்களுக்கிடையே புரிந்துணர்வு என்பவற்றை குழப்பியடிக்கும் முயற்சிகளிலேயே இவ்வாறான சக்திகள் குறிவைத்து செயற்படுவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒரு வகையில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை மறைத்து மக்களிடம் தங்களின் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள அரசியல்வாதிகள் சிலர் பல்வேறு உபாயங்களை கையாண்டு வருகின்றனர்.
இவற்றுக்கு மத்தியில் கடந்த ஆட்சியின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த கால ஆட்சியில் மக்களின் வரிப் பணத்தில் சுகபோகங்களை அனுபவித்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது போல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
உண்மையில் மக்களின் வரிப் பணத்தை சுரண்டி சுகபோகங்களை அனுபவித்தவர்களுக்கு சட்டத்தின் பிடியில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்து வருகின்றது.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் வியாழனன்று தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததுடன், அரசாங்கத்திலிருந்தும் விலகியுள்ளனர்.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பொது நிர்வாகம் மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக்கா, சற்றாடல் இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரே தமது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அரசாங்கத்திலிருந்து விலகினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றவும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யார் வேண்டுமானாலும் எந்தவொரு பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்ள முடியும், நான்கு அமைச்சர்களின் பதவி விலகலானது அவர்கள் இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் இல்லை என்பதையே எடுத்து காட்டுகின்றது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி அதன் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்ய ஒரு தரப்பு முனைவதையே அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படும் அதேவேளை, இந்த நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் வகையில் அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்ற பரவலான அபிப்பிராயமும் பொதுவாக உருப்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனை நன்கு உணர்ந்த வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து உரையாடிய அவர், அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் புதிய அரசாங்கம் செப்டெம்பர் மாதத்தில் பதவியேற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் எந்த திகதியில் நடைபெறும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சுவாரஷ்யமாகப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயத்தில் சாஸ்திரக்காரர்களை நான் சந்திக்கவில்லை.
அதனை தேர்தல் ஆணையாளர்தான் தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இரு வாரங்களுக்குள் வேட்புமனு கோரப்பட வேண்டும். ஐந்து தொடக்கம் ஏழு வாரங்களில் தேர்தலை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம், நல்லாட்சி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி வரும் நிலையில் அதனை உண்மையில் செயலுருப்படுத்த வேண்டுமாயின் ஊழலற்றதும், அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்லக்கூடியதும் தேசிய சிந்தனைகளுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதுமான ஸ்திரமான அரசாங்கமொன்று உருவாகுவது அத்தியாவசியமாகும்.
மாறாக, இதே போக்கில் தொங்கு பாராளுமன்றமொன்று அமையுமானால் அது மீண்டும் மீண்டும் நாட்டில் இவ்வாறான நெருக்கடிகளுக்கு வழிவகுப்பதாகவே அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் எவ்வாறு இனவாத சிந்தனையை ஊட்டி அதன்மூலம் பெரும்பான்மை மக்களை தங்கள் வசம் கவர அரசியல்வாதிகள் சிலர் முற்பட்டார்களோ அதேபோக்கில் இன்று, யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் அமைதியும் சுபீட்சமும் நிலவும் சந்தர்ப்பத்தில் அதே ஆயுதத்தை வேறு மார்க்கத்தில் கையேந்த முனைகின்றார்கள் என்பதே சமாதான விரும்பிகளின் பொதுவான குற்றச்சாட்டாகும்.
இந்தவிதமான போக்குகள் நல்லெண்ணத்தையும் இனங்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படுத்த ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். பயங்கரவாதத்தை விடவும் அபாயகரமானதும் கொடுமையானதும் இனவாதம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.
அது இந்த நாட்டை எந்த வகையிலும் உருப்பெற உதவப்போவதில்லை. மாறாக, சகல வழிகளிலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துவதாக அமையும்.
நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை இருக்குமானால் அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவது அத்தியாவசியமாகும்.
இன்றைய காலகட்டத்தில் மூவின மக்களும் ஏதோ ஒரு வகையில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். அதையேனும் குழப்பும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படாதிருப்பது அவர்களின் தார்மீகக் கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.