மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை!
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் காரணமாக மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_596.html
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் காரணமாக மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தற்போது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு பொதுமக்கள் பாரியளவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மரண தண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்' என்றார்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் ரோசி சேனாநாயக்க இதன்போது கருத்து கூறுகையில், 'பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் குறித்து விசாரணை செய்வதற்காக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட பொலிஸ் பிரிவொன்று நியமிப்பது குறித்து, பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாக' கூறினார்.