சூடான சூழலில் நாளை கூடவுள்ள தேசிய நிறைவேற்றுச் சபை!
தென்னிலங்கை அரசியல் களத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவைக்கு மேலான சபையாக கருதப்படும் தேசிய நிறைவேற்றுச் சபைக் கூ...


அத்துடன், குறித்த சபையில் தாம் அங்கம் வகிப்பதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என்ற முடிவை ஜே.வி.பியின் தலைவர் எடுக்கவுள்ளார். அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் உள்ளிட்ட விடயங்களால் புதிய அரசுமீது ஜே.வி.பி. அதிருப்திகொண்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனவே, தேசிய நிறைவேற்றுச் சபையில் இருந்து ஜே.வி.பி. வெளியேறுவதற்கான சாத்தியமே அதிகம் தென்படுகிறது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் அமைச்சரவை நியமனத்துக்கு எதிராக இதன்போது கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி. திஸாநாயக்க போன்றோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் சந்திரிகாவும் அரசுமீது சீற்றத்துடனேயே இருக்கிறார். குறிப்பாக அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அதற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை பற்றியும் மேற்படி சந்திப்பின்போது ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் அமைச்சரான சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளார்.
எனவே, நாளைய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளது என்பதுடன், முக்கிய அரசியல் முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன என்று அறியமுடிகிறது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, வாரத்தில் ஒரு தடவை கூடி ஆராயும் நோக்கிலேயே தேசிய நிறைவேற்றுச் சபை அமைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.காவின் தலைவர் ரிசாத் பதியுதீன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, சிஹல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, தூய்மையான நாளை அமைப்பின் சார்பில் அத்துரெலிய ரத்தன தேரர், நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.