இன்று நாடு திரும்பும் பசில் ராஜபக்சவை பிரசன்ன ரணதுங்க வரவேற்பார்!
இன்று நாடு திரும்பும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்கவுள்ளார் என த...


இன்று நாடு திரும்பும் பசில் ராஜபக்சவை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்கவுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அவரைக் கோரவுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் விரிவான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்து தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
பசில் ராஜபக்சவை மீண்டும் அரசியலில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்குக் கிடையாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னைய ஆட்சிக் காலத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அவர் இன்று நாடு திரும்பவுள்ளார்.
இந்த நீதிமன்ற உத்தரவுக்கமைய தாம் நாடு திரும்புவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாடு திரும்பும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
‘திவிநெகும’ நிதியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் கணக்கில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அவரது பெயரில் குற்றஞ் சாட்டப்பட்டு அது தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.