ஆளுநரின் உறுதிமொழியையடுத்து தூய நீருக்கான உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
தூய நீரைக் கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், வட மாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து இன்று முடிவுக்குக் கொண்டுவர...


தூய நீரைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நேற்று (07) நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது , நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை முன்னெடுத்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண முதலமைச்சர் நேற்றிரவு சந்தித்தபோது நீர்ப்பிரச்சனைக்கு உரிய முறையில் தீர்வினைப் பெற்றுத்தருவதாக எழுத்து மூலம் அறிவிக்குமாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நிலக்கீழ் நீர் தொடர்பாக முழுமையாக ஆய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெறும் வரை தற்போது பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நேற்றிரவு எழுத்து மூலம் உறுதியளித்திருந்தார்.
எனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல் நிலை மோசமடைந்து வந்தமையால் அவர்களில் சிலருக்கு இன்று அம்புலன்ஸ் வண்டிகளில் தற்காலிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டதோடு, இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் முதலமைச்சரிடம் இருந்து இரண்டு தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட உறுதி மொழிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
எனினும், குறித்த உறுதிமொழிகளில் தமது நீர்ப்பிரச்சினைக்கான தீர்வாக தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் வழங்கப்படவில்லை என தெரிவித்து, அதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சரின் மத்தியஸ்த முயற்சியின் பயனாக உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்ற வடமாகாண ஆளுநர் ஜீ.எஸ் பலிகக்காரவும் யாழ். அரசாங்க அதிபர் N.வேதநாயகனும் எதிர்வரும் திங்கட்கிழமை நீர் மாசடைதல் தொடர்பான கோரிக்கைகளுக்கு சாதகமான முடிவினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சுன்னாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள நிலக்கீழ் நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்படவில்லை என நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், இது குறித்து கருத்துத் தெரிவித்த வடமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் K.சயந்தன், குறித்த அறிக்கை ஒரு நிறுவனம் தன்னிச்சையாக மேற்கொண்ட ஆய்வு என குறிப்பிட்டிருந்தார்.