பல்சமய இல்ல இஸ்லாமிய வழிபாட்டிடத்தின் திறப்பு விழாவும் சுவிஸ் அரசு பிரதிநிதிகளின் ஒன்றுகூடலும்
சுவிஸின் தலைநகர் பேர்ண் நகரத்தில் கடந்த 14.12.2014 அன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_695.html
அரசியல் மற்றும் ஆன்மீக முக்கித்துவம் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டின் ஓர் தனித்தவமான அமைப்பாகவுள்ள இப்பல்சமய இல்லத்தில் 26.04.2015 அன்று நடைபெற்ற இஸ்லாமிய வழிபாட்டிடத்தின் திறப்பு விழாவில் சைவ நெறிக்கூடத்தின் ஞான லிங்கேசுவரர் திருக்கோவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளது.
இந் நிகழ்வுக்கு சுவிற்சர்லாந்துக்கான அமெரிக்க தூதுவர் சுசான் லெவின், பேர்ண் மாநில முதல்வர் பிரான்சிஸ்கா ரொய்சர் அம்மையார் பல் சமய இல்லப் பிரதிநிதிகள், பல் சமய மதத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள். சைவநெறிக் கூடத்தின் சார்பில் திரு. சசிகுமார் தர்மலிங்கம் உரையாற்றியிருந்தார்.
சைவநெறிக் கூடத்தின் பிரதிநிதிகள் அங்கு வருகைதந்திருந்த சர்வமதத் தலைவர்கள் அரச பிரதிநிதிகளுடன் சந்தித்து உரையாடியிருந்ததுடன், சுவிஸ் நாட்டுக்கான அமெரிக்க துதுவரான சுசான் லெவின் அம்மையாரையும் சந்தித்து உரையாடியிருந்தார்கள்.
இங்கு உரையாற்றிய முன்னாள் பல்சமய இல்லத்தின் தலைவர் Hartmut Haas அவர்கள்,
பத்து வருடங்களுக்கு முன்னர் இதுவோர் சிறிய செயற்திட்டமாக ஆரம்பித்தபோது பலரும் எல்லா மதங்களும் கலந்த பழக்கலவை எனத் தவறாக பல்சமய இல்லத்தின் நோக்கத்தையும் கருத்தையும் எண்ணியிருந்தனர் எனக் கூறினார்.
ஆனால் பல்சமய இல்லமானது எல்லா மதங்களையும் ஒன்றுடனொன்று கலக்கவிடுவது அல்ல. பதிலாக ஒவ்வொரு மதங்களும் தமது தனித்துவத்தையும் புனிதத்தையும் பேணிநின்று ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் செயலாற்றுவதையே குறித்து நிற்கின்றது என விளக்கினார்.
இன்று சர்வதேச அமைப்புகளான சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம், ஐக்கிய நாடுகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சுவிட்சர்லாந்து நாடானது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேயச் சட்டங்களின் காப்புரிமை நாடாகவும் உள்ளது.
இப்பின்னணியில் இனங்களுக்கும் பண்பாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் கலந்துரையாடலுக்கான மையமாக உருவாகியுள்ள இப்பல்சமய அமைப்பில் இந்நாட்டில் வாழும் சைவத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது தனித்துவத்தையும் மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் பேணும் அமைப்பாக சைவநெறிக்கூடம் சிறப்பான பங்கினை வகித்து வருவதானது சுவிட்சர்லாந்நதில் சைவ சமயத்துக்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இப் பல்சமய இல்லத்தில் இந்திய சிற்பக் கலைஞர்களால் சைவ ஆகமங்களின் விதிப்படி வடிவமைக்கப்பட்ட சைவ நெறிக்கூடத்தின் ஞான லிங்கேசுவரர் திருக்கோவில் ஐரோப்பாவில் முதலாவது கருவறையில் செந்தமிழ் வழிபாட்டையும் சைவத்தையும் ஒழுகும் தமிழ் சிவவழிபாட்டு ஆலயமாக உள்ளது.
எமது மொழி, பண்பாடு, தேசியம், சைவ சித்தாந்த ஆன்மீக விழுமியங்களைப் பிரதிநித்துவப்படுத்தும், பிற இன மத மக்களுக்கு எடுத்துரைக்கும் முதலாவது இந்நாட்டின் அங்கீகாரங் கொண்ட திருக்கோவிலாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வளர்ச்சியடைந்துள்ளமை இந்நாட்டில் வாழ்ந்துவரும் பல ஆயிரம் சைவத் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் சைவத்தமிழ் மக்களும் பெருமை கொள்ள வேண்டிய விடயமாகும்.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவிட்சர்லாந்து அரசுப் பிரதிநிதிகள், பல் சமயத்தலைவர்கள் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆகியோருடனான சைவநெறிக் கூடத்தின் பிரதிநிதிகளின் சந்திப்பும் ஒன்றுகூடலும் எமது மொழி, ஆன்மீக பண்பாட்டுத் தனித்துவத்தையும் சிறப்பையும் பிறநாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் கொண்டுசெல்லும் ஓர் வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.