மகிந்தவின் செயற்பாடுகள் அவருக்கே அழிவை ஏற்படுத்தும்: எஸ்.பி.திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை பெறுவதற்காக தற்போது மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சியான நடவடிக்கைகள் எதிர்கால...

மகிந்த ராஜபக்ச இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால், இறுதியில் மைத்திரிபால சேனாநாயக்க, அனுர பண்டாரநாயக்க ஆகியோர் தலைமையிலான அணி மற்றும் லலித் அத்துலத் முதலி காமினி திஸாநாயக்க தலைமையிலான அணியினருக்கு ஏற்பட்டது போல் வெற்று மைதானத்தில் உரையாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மைத்திரிபால சேனாநாயக்க, அனுர பண்டாரநாயக்க ஆகியோர் கட்சியை உடைத்து கொண்டு வெளியில் சென்றனர். அவர்களுடன் கட்சியின் மத்திய செயற்குழுவை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் சென்ற போதிலும் இறுதியில் வெற்று மைதானத்தில் உரையாற்றும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.
கட்சியை பிளவுபடுத்தி சென்றவர்கள் மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் திரும்பி வந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற லலித் மற்றும் காமினிக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டது. இவர்கள் நுகேகொடையில் நடத்திய கூட்டத்திற்கு விமல் வீரவன்ஸவினர் மகிந்தவுக்கு ஆதரவாக நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனத்தை விட அதிகளவில் மக்கள் கலந்து கொண்டனர்.
லலித்தும் காமினியும் இப்படி நாடு முழுவதும் பாரிய கூட்டங்களை நடத்தினர். மக்கள் அந்த கூட்டங்களில் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் அவர்கள் வெற்று மைதானத்தில் உரையாற்ற நேர்ந்தது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தோற்கடிக்கப்படட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய எஸ்.பி.திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
எனினும் தேர்தலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை விமர்சித்து வரும் அவர், தற்போது ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நெருங்கியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த மோசடியாளர்கள் இவ்விதமாக மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைய ஆரம்பித்துள்ளனர். இது அவர்களது அரசியல் நிர்வாண கோலத்தை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன.
இதனால், அடுத்த தேர்தலில் இப்படியான நபர்கள் குறித்து மக்கள் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.