இலங்கை வீரர்களுக்குத் தடை: மெத்யூஸ் விளையாடாமை பின்னடைவு என்கிறது டெல்லி டெயார்டெவில்ஸ்
இலங்கை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டமைக்கு டெல்லி டெயார்டெவில்ஸ் அணி அதிருப்...


இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறும் IPL போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாதென 2013ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இவ்வாண்டும் அத்தடை நீடிக்கின்றது.
இந்நிலையில், இவ்வாண்டு அஞ்சலோ மெத்யூஸ், திசர பெரேரா மற்றும் லசித் மலிங்க முறையே டெல்லி டெயார்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்மை இந்தியன்ஸ் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகின்றனர்.
இருப்பினும், குறித்த மூவரும் சென்னையில் இடம்பெறும் IPL போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் ஆலோசகர் டி.ஏ. சேகர் தெரிவிக்கையில், 7.5 கோடி ரூபாய்க்கு அஞ்சலோ மெத்யூஸைத் தாம் ஏலத்தில் எடுத்திருப்பதாகவும் சென்னையில் அவர் விளையாடாவிட்டால் அது தமது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
நாளை (ஏப்ரல் 9) சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் டெல்லி டெயார்டெவில்ஸும் மோதுகின்றன.
தடை காரணமாக மெத்யூஸ் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.