ஈரானின் 4 அம்ச சமாதானத் திட்டத்தை நிராகரித்தது யேமென்
யேமெனில் நாளுக்கு நாள் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி மீளத் திரும்புவதற்காக சமீபத்தில் ஐ.நா விடம் 4 அம்ச அமைதித் த...
http://kandyskynews.blogspot.com/2015/04/4.html
யேமெனில் நாளுக்கு நாள் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி மீளத் திரும்புவதற்காக சமீபத்தில் ஐ.நா விடம் 4 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் கையளித்து இருந்தது. மேலும் இந்த அமைதித் திட்டம் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜாவத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை கடிதம் வரைந்தும் இருந்தார்.
இக்கடிதத்தில் முக்கியமாக யேமெனின் உட்கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கும் சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகளின் வான் தாக்குதல் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் எனவும் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களுக்கு மருத்துவ உதவிகள் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உடனே கிடைக்குமாறு செய்ய வேண்டும் எனவும் எந்த வெளிநாட்டுத் தலையீடும் இன்றி யேமெனின் அனைத்து அரசியல் பிரிவினரும் பங்கேற்கும் தேசிய அரசு அமைக்கப் பட வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டிருந்தது. ஆனால் ஐ.நா இடம் சமர்ப்பிக்கப் பட்ட ஈரானின் இந்த 4 அம்ச அமைதித் திட்டத்தை யேமென் அரசு உடனடியாக நிராகரித்துள்ளதாக சனிக்கிழமை அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யேமெனின் தலைநகர் சனாவைக் கைப்பற்றி அரசைக் கலைத்ததுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து 3 வாரங்களாக சவுதி அரேபியா தலைமையிலான சுன்னி அரபு கூட்டணி நாடுகள் வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த யுத்தமானது OPEC இன் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சுன்னி முஸ்லிம்களின் சவுதி அரேபியா மற்றும் ஷைட்டிக்களின் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஓர் மறைமுகப் போராகவே வர்ணிக்கப் படுகின்றது. இந்நிலையில் தான் ஈரானின் அமைதி ஒப்பந்தத்தைத் தாம் நிராகரிப்பதாக யேமெனின் அரச பேச்சாளர் ராஜேஹ் படி கட்டார் தலைநகர் டோஹாவில் இருந்து ராய்ட்டர்ஸுக்குத் தெரிவித்துள்ளதுடன் இந்த அமைதி ஒப்பந்தம் அரசியல் சுயலாபங்களுக்காக மும்மொழியப் பட்ட ஒன்று எனவும் கூறியுள்ளார். எனினும் யேமெனில் போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவ சுமார் 253 யூரோக்கள் அளிக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
யேமென் யுத்த நிலவரம் குறித்து ஐ.நா அளித்த தகவலின் படி சவுதி கூட்டணி நாடுகளின் விமான மற்றும் தரை வழித் தாக்குதல்கள் காரணமாக சுமார் 150 000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாகவும் 750 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் சவுதி மன்னர் சல்மான் ஆகியோர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தொலைபேசி உரையாடலில் யேமேனில் சமாதானம் ஏற்பட மும்மொழியப் பட்ட அரசியல் தீர்வே உகந்தது என்ற முடிவுக்கு வந்ததாக வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இதேவேளை யுத்தப் பதற்றம் நிலவும் வளைகுடா நாடான யேமெனுக்கு அருகேயுள்ள பாப் எல் மண்டெப் என்ற குறுகிய கடல் பாதையின் ஊடாக தினசரி அண்ணளவாக 4 மில்லியன் பரெல் எண்ணெய் கப்பல்கள் வாயிலாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய தேசங்களுக்குக் கொண்டு செல்லப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate