2 ஆம் உலகப் போர் வெற்றி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்பதை எதிர்க்கிறதா வாஷிங்டன்?
எதிர்வரும் மே 9 ஆம் திகதி 2 ஆம் உலகப் போர் நிறைவுற்ற 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதன் போது நாஷிக்களால் கொல்லப்...

இதன் போது நாஷிக்களால் கொல்லப் பட்ட மக்களுக்கு மரியாதை அளிக்கும் முகமாகவும் நாஷிசத்துக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் முகமாகவும் குறித்த தினத்தில் ரஷ்யா இராணுவ அணிவகுப்பை நிகழ்த்தவுள்ளது.
மேலும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக முக்கிய உலகத் தலைவர்களுக்கு புட்டின் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் உக்ரைனில் பிரிவினை வாதிகளுக்கு ரஷ்யா தொடர்ந்து உதவி வருவதை எதிர்க்கும் முகமாக பல உலகத் தலைவர்கள் இந்த அழைப்பை நிராகரித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் உலகத் தலைவர்கள் ரஷ்ய உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் ஏன அமெரிக்காவே அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக புட்டின் இன்று வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்க பல உலகத் தலைவர்களுக்கு விருப்பம் இருப்பதாகவும் இது தொடர்பான முடிவை அவர்கள் சொந்தமாக எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள புட்டின் சில உலகத் தலைவர்களுக்கு வாஷிங்டன் இது தொடர்பில் கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருப்பதாக வெளிப்படையாகவே சாடியுள்ளார்.
ஆனால் இந்த வெற்றி ஊர்வலத்தில் சீன மற்றும் வடகொரியத் தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் பட்டுள்ளது. இதேவேளை 2 ஆம் உலகப் போரின் போது நேட்டோ தலைமையிலான கூட்டணி நாடுகளின் வெற்றிக்கு சோவியத் துருப்புக்களின் மிகப் பெரிய பங்களிப்பும் ஒரு காரணம் எனவும் இப்போரின் போது சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் பொதுமக்கள் கொல்லப் பட்டதாகவும் கூட புட்டின் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இவ்வாறு உயிர்த் தாகம் செய்தவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மரியாதை செலுத்தத் தான் இந்த இராணுவ ஊர்வலம் மற்றும் விடுமுறை என்றும் புட்டின் கூறியுள்ளார்.