பெசில் 20 ஆம் திகதி இலங்கை வருகிறார்; விமான நிலையத்தில் வைத்தே விசாராணை ஆரம்பம்
பல கோடி ரூபாய்கள் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வர...


பெசில் ராஜபக்ஷவிற்கெதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பண மோசடி வழக்கு நேற்று(02) கடுவல நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தம்மிக்க ஹேமபால முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
திவிநெகும திணைக்களத்தின் பணத்தினை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செலவு செய்தமை , மோசடிகளில் ஈடுபட்டமை, மாநாட்டுக்காக 70 மில்லியன் ரூபாய்களை செலவு செய்தமை போன்ற பல பண மோசடிக் குற்றச்சாட்டுக்களை பெசில் ராஜபக்ஷவிற்கு எதிராக பொலிஸ் பிரதான குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி கடுவல நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தம்மிக்க ஹேமபால கடந்த மாதம் மார்ச் 31 ஆம் திகதி இவ் வழக்கு விசாரணையின் போது பெசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை வந்தடைந்தவுடன் அவர் விமான நிலையத்தில் வைத்தே பிரதான குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்கு மூலம் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கும்படி குடிவரவு,குடியகல்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
நேற்றைய தினம்(02) மீண்டும் இவ்வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலே கடுவல நீதிபதி முன்னர் வழங்கிய உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் பிரதிவாதிக் குழுவினருக்கு அவசியமாக இருந்தால் கட்டளையின் பிரதியொன்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு முன்னர் ஒருதடவை பெசில் ராஜபக்ஷ தான் மருத்துவப் பரிசோதனைக்காக அமேரிக்கா சென்றிருப்பதாகவும் விரைவில் இலங்கை வருவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.