மாட்டிறைச்சிக்கு தடை: உணவுப் பழக்க உரிமையை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை- வீரமணி
சென்னை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழக மக்கள் போராட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமண...


சென்னை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழக மக்கள் போராட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘'மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை. பல மதங்களும், கலாசாரங்களும் உள்ள நமது நாட்டில் ஒரு மதத்தினர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள். கடவுளுக்கும் படைக்கிறார்கள்.
இன்னொரு மதத்தினர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆனால் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே உண்கிறார்கள். இதைத் தடுக்க ஜனநாயக முறையில் செயல்படும் அரசுகளுக்கு உரிமை இல்லை.
உலகெங்கும் பெரும்பான்மை மக்களின் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. நம் நாட்டில் ஏழைகளுக்கு மலிவான விலையில் கிடைக்கிறது.
இதைத் தடுப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். எனவே, மகாராஷ்டிர அரசின் தடையை எதிர்த்து தமிழக மக்கள் போராட வேண்டும்'' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.