ISIS உடன் சேர்வதற்கென சிரியா நோக்கிச் செல்ல முயன்ற 3 பிரிட்டன் இளவயதினர் கைது
ISIS போராளிகளுடன் சென்று சேரும் நோக்கத்தில் பிரிட்டனில் இருந்து சிரியா நோக்கிச் செல்ல முயன்ற 3 இளவயதினர் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லி...


மேலும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்ற சந்தேகத்தின் பேரில் இவர்களைத் தாம் கைது செய்திருப்பதாக பிரிட்டன் போலிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
கைது செய்யப் பட்ட மூவரும் தற்போது மத்திய இலண்டன் போலிஸ் நிலையத்தில் கஸ்டடியில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப் படாத நிலையில் இருவர் 17 வயதுடைய வடகிழக்கு இலண்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சியவர் 19 வயதுடையவர் எனவும் தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப் பட்ட இவர்கள் மூவருமே பிரிட்டன் குடியுரிமை உடையவர்களாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த இளவயதினரின் குடும்பத்தினருக்கு இவர்கள் குறித்த தகவல்கள் அளிக்கப் பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் இருந்து ISIS உடன் சென்று சேரும் நோக்கில் இரகசியமாகப் புறப்பட்டுச் செல்லும் இளவயதினரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருவது அந்நாடுகளின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த மாதம் தான் 3 பிரிட்டிஷ் பள்ளி மாணவிகள் துருக்கிக்குச் சென்று அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட முன்னரேயே எல்லையைக் கடந்து சிரியாவுக்குள் நுழைந்து இருந்ததாகவும் இம் மாணவியரை இனி மீட்பது கடினமான செயல் எனவும் பிரிட்டன் அறிவித்திருந்தது. மேலும் இச்சம்பவத்தின் போது துருக்கி அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு அம்மாணவியரைத் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.
இதுவரை சுமார் 700 பிரிட்டன் பிரஜைகள் பெரும்பாலும் ISIS உடன் இணைவதற்காக சிரியாவுக்குச் சென்றிருப்பதாகப் பிரிட்டன் போலிஸ் தெரிவிக்கின்றது. மேலும் இவர்கள் பிரிட்டனுக்குத் திரும்பும் பட்சத்தில் பிரிட்டனுக்குள் தாக்குதல்களைத் தொடுப்பதற்கான ஆபத்தும் அதிகரித்திருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வளர்ந்து வரும் இணையத் தொழிநுட்பமும் சமூக ஊடகங்களும் இளம் வெளிநாட்டினரை சிரியாவுக்குள் உள்ள தீவிரவாதிகளுடனான தொடர்பை எளிதாக்கி வளர்த்து விட்டதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.