முக்கிய நகரை ஐஎஸ்ஸிடமிருந்து மீட்டது ஈராக்கியப் படை
ஈராக்கின் மேற்குப் பகுதி நகரமான அல் - பாக்தாதியிலிருந்து ஐஎஸ் படையினரை ஈராக்கியப் படைகள் விரட்டியிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_700.html
ஈராக்கின் மேற்குப் பகுதி நகரமான அல் - பாக்தாதியிலிருந்து ஐஎஸ் படையினரை ஈராக்கியப் படைகள் விரட்டியிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நகரத்தை கடந்த வாரம்தான் ஐஎஸ் படைகள் பிடித்தன. ஈராக்கிய வீரர்களுக்கு பயிற்சியளித்துவரும் அமெரிக்க படையினர் தங்கியிருக்கும் முகாமிலிருந்து எட்டுக் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் இருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய 'துல்லியமான - திறன்மிக்க' வான் தாக்குதலையடுத்து ஈராக்கியப் படைகள் உள்ளே நுழைந்ததாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈராக்கின் பழங்கால நகரமான அசிரியன் நகரை புல்டோஸர்களைக் கொண்டு அழித்த ஐஎஸ்ஸின் செயலுக்கு பரவலாகக் கண்டனம் எழுந்துள்ளது.
ஈராக்கின் தலைநகர் பாக்தாதிற்கும் மோசுல் நகருக்கும் இடையில் அமைந்திருக்கும் திக்ரித் நகரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் ஈராக்கியப் படை தெரிவித்துள்ளது.
திக்ரித் நகரை மீற்கும் முயற்சியில் ஈராக்கிய வீரர்கள், ஷியா போராளிகள் என 30,000 பேர் இணைந்துள்ளனர்.
திக்ரித் நகரின் தென்பகுதியில் இருக்கும் அல்-தூர் நகரை வந்தடைந்துவிட்டதாக ராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அல் -தூர் நகர் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஷியா போராளிப் படையைச் சேர்ந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், முழு நகரமும் விடுவிக்கப்பட்டுவிட்டதா என்பது தெளிவாகவில்லை.
ஐஎஸ் தீவிரவாதிகள் பெருமளவில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதால், முன்னேறிச் செல்வதன் வேகம் குறைந்திருப்பதாக பிரதான ஷியா கூட்டணியின் மூத்த தளபதியான மொயீன் அல் -காதிமி தெரிவித்தார்.
"ஐஎஸ் இயக்கம் வெடிகுண்டுகளை, சாலைகள், வீடுகள் என எல்லாவற்றிலும் பொருத்தி வைத்திருப்பதால் நாங்கள் மிகக் கவனமாகத் திட்டமிட்டுவருகிறோம்" என திக்ரித்திற்குச் செல்லும் படையினருடன் இருக்கும் பிபிசி செய்தியாளரிடம் அவர் கூறினார்.
ஈராக் அரச படையினருக்கு ஆதரவாக, அமெரிக்கா தலைமையிலான படை வான் தாக்குதல் நடத்தி உதவுகிறது. இதுவரை 26 முறை வான் தாக்குதல்கள் ஐஎஸ் மீது நடத்தப்பட்டிருக்கின்றன.
அன்பார் மாகாணத்தில் ஈராக்கிய அரசுப் படைகள் மேலும் பல பகுதிகளைக் கைப்பற்றும் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
![]() |
நிம்ருத் நகரம் ஐஎஸ் இயக்கத்தால் அழிக்கப்பட்டதற்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. |
"இது ஒரு போர்க்குற்றம். மனித குலம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்" என ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கருதுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக்கின் வரலாற்றையும் பழங்கால நாகரீகத்தையும் அழித்தொழிப்பதாக ஈராக்கின் மிக செல்வாக்கு மிகுந்த ஷியா மதகுருவான அயதுல்லா அலி அல் - சிஸ்தானி தெரிவித்துள்ளார்.