தவறான பாதையில் செல்ல முயன்றால் மஹிந்த அரசின் கதியே ஏற்படும்! - புதிய அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை.
சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_398.html
![]()
சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும். அதைக் காண நாம் விரும்பவில்லை. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
|
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்றினேன். இந்த ஆணைக்குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால், சாட்சிகள் பல்வேறு விதமான முறையில் அழைக்கப்படுகின்றனர்.
சாட்சிகளாக அழைக்கப்படுபவர்களிடம் ஆணைக்குழு தலையிட்டு கோழி, ஆடு தருகின்றோம் என்று கூறுகின்றது. "ஆடு, கோழி வேண்டாம். எமக்கு எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்'' என்று பல தாய்மார்கள் இதன்போது கூறினர். இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆணைக்குழு விசாரணையில் இடம்பெற்றுள்ளன. இது ஒரு பாரிய விடயமாகும். இதனால் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை.
இவ்வாறான நிலையில், இந்த ஆணைக்குழுவின் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைக்குழு மட்டுமன்றி, அதற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள டெஸ்மன் டி சில்வா தலைமையிலான சர்வதேச ஆலோசனைக் குழு மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இப்படியான விசாரணை தொடரக்கூடாது. இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போடுமாறும், உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை அரசு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து உறுதியளித்துள்ளது.
பரணகம ஆணைக்குழு மற்றும் அதன் விசாரணை நடவடிக்கைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்தத் தவறான முறைக்கு இடமளிக்க முடியாது. எனவே, சர்வதேச மேற்பார்வையுடன் புதிய பொறிமுறை ஊடாக இந்த உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். அதைவிடுத்து, தவறான பாதையில் அரசு பயணிக்குமானால், மஹிந்த அரசுக்கு ஏற்பட்ட நிலைமையே இதற்கும் ஏற்படும். அதைக் காண நாம் விரும்பவில்லை. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை ஐக்கியப்படுத்தி பாதுகாக்க முடியும் என்றார்.
|



Sri Lanka Rupee Exchange Rate