ஆஸ்திரேலிய அணியிடமும் அடிவாங்கிய ஸ்காட்லாந்து வெற்றியே பெறாமல் வெளியேறியது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை எளிதில் தோற்கடித்தது. ஸ்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை எளிதில் தோற்கடித்தது. ஸ்காட்லாந்து அணி வெற்றியே பெறாமல் முதல் சுற்றுடன் வெளியேறியது.
ஸ்காட்லாந்து 130 ரன்கள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் நேற்று நடந்த 40–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஏற்கனவே கால் இறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி, கால் இறுதி வாய்ப்பை இழந்து விட்ட ஸ்காட்லாந்தை சந்தித்தது.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அனல் வீசிய வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25.4 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது.
லேசான மழை
25–வது ஓவரின் போது லேசாக மழை தூரல் போட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டு தொடர்ந்தது. அதிகபட்சமாக மேட்மாசன் 40 ரன்னும், ஜோஷ்டேவி 26 ரன்னும், லீக்ஸ் ஆட்டம் இழக்காமல் 23 ரன்னும், மெக்லியோட் 22 ரன்னும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஷேன் வாட்சன், ஜான்சன், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி
பின்னர் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் 15.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 20 ரன்னிலும், ஷேன் வாட்சன் 24 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை 5–வது வீரராக தள்ளிவிட்டு, தொடக்க ஆட்டக்காரராக அவதாரம் எடுத்த கேப்டன் மைக்கேல் கிளார்க் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். பவுல்க்னெர் 16 ரன்னுடனும், டேவிட் வார்னர் 21 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஜோஷ்டேவி, ராப்டெய்லர், இயான் வார்ட்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
2–வது இடம்
6–வது லீக் ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி (4 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) மொத்தம் 9 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி, கால் இறுதியில் பாகிஸ்தானை சந்திக்க வாய்ப்பு உள்ளது. 3–வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் ஸ்காட்லாந்து அணி, வழக்கம் போல் இந்த முறையும் எந்தவித வெற்றியும் பெறாமல் மூட்டையை கட்டியது. அந்த அணி இதுவரை உலக கோப்பையில் தான் ஆடிய 13 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
ஸ்கோர்போர்டு ஸ்காட்லாந்து
கைல் கோயட்செர் (சி) ஸ்டீவன் சுமித் (பி) ஸ்டார்க் 0
மெக்லியோட் (சி) வார்னர் (பி) ஸ்டார்க் 22
மேட் மாசன் (சி) பவுல்க்னெர் (பி) கம்மின்ஸ் 40
பிரஸ்டன் மம்சென் (சி) ஸ்டார்க் (பி) வாட்சன் 0
பிரெடிகோல்மன் (சி) கிளார்க் (பி) ஜான்சன் 0
பெரிங்டன் (சி) வார்னர் (பி) மேக்ஸ்வெல் 1
மேத்யூ கிராஸ் (சி) ஹேடின் (பி) கம்மின்ஸ் 9
ஜோஷ்டேவி (பி) ஸ்டார்க் 26
ராப் டெய்லர் (சி) ஹேடின் (பி) கம்மின்ஸ் 0
மைக்கேல் லீஸ்க் (நாட்–அவுட்) 23
இயான் வார்ட்லா (பி) ஸ்டார்க் 0
எக்ஸ்டிரா 9
மொத்தம் (25.4 ஓவர்களில் ஆல்–அவுட்) 130
விக்கெட் வீழ்ச்சி:
1–8, 2–36, 3–37, 4–50, 5–51, 6–78, 7–79, 8–95, 9–130.
பந்து வீச்சு விவரம்:
ஸ்டார்க் 4.4–1–14–4
கம்மின்ஸ் 7–1–42–3
வாட்சன் 3–0–18–1
ஜான்சன் 4–1–16–1
மேக்ஸ்வெல் 4–0–24–1
பவுல்க்னெர் 3–0–15–0
ஆஸ்திரேலியா
கிளார்க் (சி) லீஸ்க் (பி) வார்ட்லா 47
ஆரோன்பிஞ்ச் (சி) கோல்மன் (பி) ராப் டெய்லர் 20
வாட்சன் (சி) மேத்யூ கிராஸ் (பி) ஜோஷ்டேவி 24
பவுல்க்னெர் (நாட்–அவுட்) 16
வார்னர் (நாட்–அவுட்) 21
எக்ஸ்டிரா 5
மொத்தம் (15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 133
விக்கெட் வீழ்ச்சி:
1–30, 2–88, 3–92.
பந்து வீச்சு விவரம்:
வார்ட்லா 5–0–57–1
ராப்டெய்லர் 5–0–29–1
ஜோஷ்டேவி 5–1–38–1
லீஸ்க் 0.2–0–7–0

Related

விளையாட்டு 3998137728715505232

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item