ஜே.வி.பி தேசிய நிறைவேற்றுச் சபைக்குள் அரசாங்கத்தை விமர்சிப்பதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய நிறைவேற்றுச் சபையில் ஜே.வி.பி எம்முடன் ஒன்றாக அமர்ந்தும் சிறந்த முறையில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து விட்டு வெளியே வருகிறது.
ஆனால், வெளியில் ஒவ்வொரு கதைகளை கூறி அரசாங்கத்தை திட்டி ஊடகங்களில் வீர அறிக்கைகளை வெளியிடுகிறது.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜே.வி.பி மாத்திரமல்ல, அமைச்சர் சம்பிக்க ரவணக்க , நான் உட்பட அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.
தேர்தலுக்கு செல்லும் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எமது நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கினர். மக்களை ஏமாற்றினர். பொய் கூறும் இந்த அரசியலை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் இளைய தலைமுறையினர் மாற்றம் ஒன்றை கோரி வீதியில் இறங்கினர்.
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கினர். இதனால், இளைய தலைமுறையினரை வெறுப்புக்கு உள்ளாக்காது 100 நாட்களுக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.
100 நாட்கள் அல்லது காலத்தை விட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே முக்கியமானது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனக் கொடுக்கப்படும் பெரும் அழுத்தம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,
முன்னாள் ஜனாதிபதி, தேர்தலில் தோல்வியடைந்து, பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் அளவுக்கு முட்டாளாக இருப்பரா என்பது எனக்கு தெரியாது.
உயர்ந்த பதவியில் இருந்து விட்டு அதனை விட கீழே உள்ள பதவிக்கு வர வெட்கமில்லையா?.
அதிகார மோகம் தலைக்கேறியுள்ளது. அவர் அதனை கைவிடப் போவதில்லை. கைவிட்டு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அவர் செய்த முறையற்ற செயல்கள், அநீதிகள் மற்றும் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா என்பதை என்னால் எண்ணி பார்க்க முடியவில்லை.
எமது அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை குழப்புவதற்காகவே மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியல் மேடைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகாக்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை தடுத்து அவற்றை குழப்புவதே அவரது நோக்கம். அவரது அரசாங்கத்தில் அவருடன் இருந்த மோசடியாளர்கள் இந்த வேலையில் இணைந்துள்ளனர் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.