சூரிய சக்தியால் இயங்கும் விமானம் பயணத்தை தொடங்கியது
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் ஒன்று உலகை சுற்றிவரும் சாதனை முயற்சியை இன்று அபுதாபியிலிருந்து தொடங்கியுள்ளது. ‘சோலார் இம்பல்ஸ்-2’ என்று அ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_187.html
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் ஒன்று உலகை சுற்றிவரும் சாதனை முயற்சியை இன்று அபுதாபியிலிருந்து தொடங்கியுள்ளது.
‘சோலார் இம்பல்ஸ்-2’ என்று அழைக்கப்படும் அந்த விமானம் முதலில் ஒமானின் மஸ்கட் நகருக்கு செல்கிறது.

அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 7:12 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் ஒரே ஒரு விமான ஓட்டுனருக்குத்தான் இடம் உள்ளது. சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஆண்ட்ரே போர்ஷ்பர்க் விமான ஓட்டுனராக தொடங்கியுள்ள இந்தப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் பேர்ட்ராண்ட் பிக்கார்ட் விமான ஓட்டுனராக பயணிப்பார்.
ஓய்வுக்காகவும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகவும் உலகின் பல நாடுகளில் நிறுத்தப்படும் இந்த விமானம், அப்பகுதிகளில் ‘தூய்மையான தொழில்நுட்பங்கள்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் பயணிக்கிறது. விமானத்தின் பயண விவரங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்படுகிறது.
2050ஆம் ஆண்டிற்குள் உலகில் மின்சாரத்திற்கு பெருமளிவிலான மூல ஆதாரமாக சூரிய சக்தியே திகழும் என்று அறிக்கைகள் கூறும் நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் சூரிய மின் பேனல்களின் விலை 70சதவித வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்த தசாப்த்தத்தில் அதன் விலை மேலும் பாதி அளவுக்கு சரிவை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் சூரிய சக்தி நிறுவனங்களில் பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை நிலக்கரி ஆற்றல் நிறுவனங்களில் பணிப்புரிபவர்களைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில், அடுத்த 18 மாதங்களில் காற்று மூலமான மின்சக்தி துறைக்கு போட்டியாக சூரிய சக்தி துறை இருக்கும் என்றும், விரைவில் அது எரிவாயு துறையுடன் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சூரிய சக்தி ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் அது போதுமானதாக அமையாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இது போன்ற சூரிய சக்தியால் இயங்கும் விமான முயற்சிகள் வெற்றிப்பெறிருந்தாலும், உலகைச் சுற்றி வர எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வியக்கதக்க முயற்சியாகவும், கடினமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
சோலார் இம்பல்ஸ் – 1 விமானத்தை விட சோலார் இம்பல்ஸ் – 2 விமானம், அளவில் பெரியதாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி நிறைந்த லித்தியம் ஐயன் பேட்டரிகள் அந்த விமானம் இரவு நேரத்திலும் பறக்கப் பயன்படுகிறது. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களை கடக்கும் இருட்டு நேரத்தில் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகை சுற்றிவரும் சோலார் இம்பல்ஸ் – 2 விமானத்தின் இந்த பயணம், காலநிலை சரியாக அமைந்தால் சாத்தியமாகும் என்று கணினிக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் நிஜத்தில் உலகை சுற்றிவரும் சாதனை முயற்சி வெற்றியடைகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.