கொலம்பியாவைத் உலுக்கிய 6.6 ரிக்டர் பூகம்பத்தால் மக்கள் பீதி:உயிரிழப்பு இல்லை
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் செவ்வாய்க்கிழமை இரவு தலைநகர் பொகொட்டாவுக்கு அண்மையில் 6.6 ரிக்டர் அளவுடைய ஓரளவு சக்தி வாய்ந்த நிலநடுக்...
http://kandyskynews.blogspot.com/2015/03/66.html

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் செவ்வாய்க்கிழமை இரவு தலைநகர் பொகொட்டாவுக்கு அண்மையில் 6.6 ரிக்டர் அளவுடைய ஓரளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
கிழக்கு புக்காரமங்கா நகரில் இருந்து 17 மைல் தெற்கே மையம் கொண்டு நிலத்துக்கு அடியில் 98.5 மைல் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளது. இதனால் பொகோட்டா உட்பட நிலநடுக்கம் தாக்கிய சில நகரங்களில் வீடுகளும் கட்டடங்களும் குழுங்கியதுடன் மக்கள் பீதியடைந்து வீதியில் குழுமினர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் கரிபியன் கடற்கரை ஓரமாகவும் மேற்கு வெனிசுலாவிலும் கூட உணரப் பட்டுள்ளது. குறிப்பிட்டளவு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதும் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. எனினும் பொகொட்டாவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்தாகியுள்ளது. மேலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதால் மக்கள் யாவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதைவிட சமூக வலைத் தளங்களிலும் கொலம்பிய மக்கள் பூகம்ப அச்சுறுத்தல் மற்றும் தயார் நிலை குறித்துத் தகவல் பகிர்ந்து வருவதால் இவ்விவகாரம் சூடு பிடித்துள்ளது.
இதேவேளை இன்று புதன்கிழமை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானைத் தாக்கிய பாரிய பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ஃபுக்குஷிமா அணு உலையை சேதப் படுத்தி பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிரைப் பலி வாங்கிய அனர்த்தத்தின் 4 ஆவது ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் அனுட்டிக்கப் பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 9 ஆகப் பதியப் பட்டிருந்த இந்த ஜப்பான் பூகம்பம் உற்பத்தி செய்த சுனாமி அலைகள் 20 நிமிடம் கழித்து வடக்கு ஹொக்கைடோ மற்றும் தெற்கு ஒக்கினாவா கடற்கரையோரமாகத் தாக்கியதுடன் 400 000 இற்கும் அதிகமான கட்டடங்களையும் வீடுகளையும் சேதப் படுத்தி 15 891 உயிர்களைக் குடித்தது. இதில் 2584 பேர் காணாமற் போயும் இருந்தனர். 2004 ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்குப் பின்னர் மிக பாரிய ஒன்றாக ஃபுக்குஷிமா சுனாமி அனர்த்தம் நவீன வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.
மேலும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் உலகின் அணு உலைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையைத் தாக்கி இருந்த இந்த சுனாமி அனர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate