நல்லிணக்கத்தினை ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வத...
நல்லிணக்கத்தினை ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச விசாரணை இனப் பிரச்சினைக்கு தீர்வாகாது என தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய தேசிய அரசாங்கத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டது.
தேசிய அரசாங்கம் அமையப்பெற்ற பின்னரும் இலங்கையை சர்வதேச அழுத்தங்கள் சூழ்ந்து வருகின்றமை தொடர்பில் வினவிய போதே ஹெல உறுமய கட்சியின் பொது செயலாளர் சம்பிக்க ரணவக்க மேற்போன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதானது,
யுத்தம் முடிவடைந்தும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு எட்டுவதற்கு வாய்ப்புக்கள் அமையாதமைக்கு தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைமைகள் இரண்டு பக்கத்திலும் பல தவறுகள் விடப்பட்டது. எனினும் தனித்து தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதை விட நாட்டை காப்பாற்றி ஒட்டு மொத்தமாக தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும். சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தினை எற்படுத்தினோம்.
எனவே தற்போது மக்கள் விரும்பும் மக்களின் சுதந்திரத்தினையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் தேசிய அரசாங்கமொன்றினை அமைத்துள்ளோம். இதில் மூவின மக்களின் பங்கும் உள்ளடங்கியுள்ளது. அதேபோல் தொடர்ந்தும் மூவின மக்களையும் ஒன்றிணைத்து இவ் ஆட்சியினை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறானதொரு நிலையில் தொடர்ந்தும் சர்வதேசத்தின் பக்க சார்பான தலையீட்டினை நாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இலங்கைக்குள் குழப்பங்கள் வருமே தவிர சர்வதேச தலையீட்டினால் இனப்பிரச்சினைக்கான தீர்வோ அல்லது பக்க சார்பற்ற விசாரணையோ இடம்பெற போவதில்லை. அதேபோல் வடமாகாண சபையின் செயற்பாடுகள் நாட்டை காப்பாற்றும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் இல்லை. படித்த கூட்டம் நீதி அறிந்த பலர் வடமாகாண சபையில் உள்ளனர். அரசியல் அனுபவமும் தற்போதைய நிலமைகள் எவ்வாறானதென தெரிந்த அரசியல் தலைவர்கள் உள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் வடமாகாண சபையில் இனப்படுகொலையை வலியுறுத்தி தீர்மானமொன்று கொண்டு வருவது நாட்டை பாதுகாக்கும் வகையில் அமைய பெறாது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் தமிழர் தரப்பினருக்கு நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் பிரிவினைகளை தூண்டும் வகையில் சர்வதேச தலையீடுகளை எவரும் தூண்டுவது மோசமானதொரு செயற்பாடாகும். சர்வதேசம் தலையிடுவதானால் நாட்டில் எந்தவொரு பிரச்சினைகளும் தீரப் போவதில்லை. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமைகள் எவ்வளவு மோசமானதாக உள்ளதென்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே நாமும் அவ்வாறானதொரு தவறினை விட்டு விடக் கூடாது. தற்போது ஏற்பட்டுள்ள உள்ளகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். தேசிய அரசாங்கம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தயாராகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.