'சிதம்பரபுரம் முகாம் மக்களுக்கு அந்த இடத்திலேயே காணி': சி.வி.
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக வவுனியா சிதம்பரபுரம் முகாமில் உதவிகளின்றி வாழ்ந்துவருகின்ற குடும்பங்களை அதே இடத்தில்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_2.html
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக வவுனியா சிதம்பரபுரம் முகாமில் உதவிகளின்றி வாழ்ந்துவருகின்ற குடும்பங்களை அதே இடத்தில் காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
சிதம்பரபுரம் முகாமுக்கு சென்று, அங்குள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களின் நிலைமைகளைக் கேட்டறிந்த பின்னரே முதலமைச்சர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகம் சென்று, பின்னர் 1995 ஆம் ஆண்டு இலங்கையில் மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான இடமபெயர்ந்த குடும்பங்கள் வவுனியா சிதம்பரபுரம் சிறப்பு அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இவர்களை தற்காலிகமாக இந்த முகாமில் தங்க வைத்திருந்தது.
எனினும், திட்டமிட்டபடி 6 மாத காலத்துக்குள் அந்தக் குடும்பங்களை மீள்குடியேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தமையால், பல ஆண்டுகளாகவே அவர்கள் அந்த முகாமிலேயே தங்கியிருக்க நேர்ந்தது.
எனினும், படிப்படியாக பல குடும்பங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றன. முன்னர் வசித்த இடங்களில் சொந்தக் காணிகள் இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலேயே அவர்களின் விருப்பத்திற்கமைய வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.

இந்தப் பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் மாற்றுக் குடியேற்றத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகளை ஐநா நிறுவனங்களும் நிறுத்தியிருந்தன. அரசாங்கமும் அந்த உதவிகளை நிறுத்தியிருந்தது.
இதனால் சிதம்பரபுரம் முகாமில் தொடர்ந்து வசித்துவந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமல் போயின.
அவ்வாறே, சிதம்பரபுரம் முகாமில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டில்களும் மக்கள் வசிக்க முடியாத அளவுக்குப் பழுதடைந்து போயின. எனினும் அதே இடங்களிலேயே சுமார் 200 குடும்பங்களும் வசித்து வந்தன. தங்களை அதே இடத்தில் காணிகளை வழங்கி நிரந்தரமாகக் குடியிருப்பதற்கான வசதிகளைச் செய்து தருமாறு அவர்கள் கோரியிருந்தனர்.
இதனையடுத்தே, சிதம்பரபுரம் முகாமுக்கு சென்றிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்ற நிலைமைகளை அடுத்து, இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக சிதம்பரபுரத்திலேயே அந்த மக்களைக் குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate