மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி தீர்மானம்
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_124.html

மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகச்வை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 18ஆம் திகதி கொழும்பு – நுகேகொட பிரதேசத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு யாருக்கும் தடையில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரிதர்ஷன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கும் ஜனாதிபதி கடுமையான ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார்.
விமல் வீரவங்ச ஏற்பாட்டில் நடைபெற்ற நுகேகொட கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என கட்சியின் செயற்குழு தீர்மானித்திருந்த நிலையில் அதனையும் மீறி கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டதை ஜனாதிபதி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கொன்று கட்டுநாயக்க நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி தனது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கட்சி உறுப்பினர்கள் நுகேகொட கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ” அநுர, சுசில் ஆகியோர் இன்னமும் பழைய தலைவருக்குப் பயந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்” என்றும் குறிப்பிட்டார்.
தனி நபர்களைத் தவிர்த்து கட்சிகளை அடிப்படையாக வைத்து மக்களின் ஆதரவைப் பெறறுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தலைதூக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லையென சில உறுப்பினர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.