பள்ளிக்கூட அதிபர்களுக்கான இராணுவ பயிற்சியை நிறுத்த முடிவு'
இலங்கையில் பள்ளிக்கூட அதிபர்களுக்கு (தலைமை ஆசிரியர்கள்) இராணுவ முகாம்களில் வழங்கப்பட்டுவரும் தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துவதற்கு கல்வி அமைச...


இந்த தீர்மானத்தின் பிரகாரம் ஏற்கனவே பயிற்சியை முடித்துக் கொண்ட அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ தரத்திலான கர்ணல் மற்றும் கேப்டன் படிநிலைகளும் இரத்து செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்மானங்கள் பற்றி ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ள சந்திப்பொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ தரத்திலான படிநிலைகளை வழங்கிய கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கை, பள்ளிக்கூடங்களை இராணுவ மயமாக்கும் முயற்சி என்று ஆசிரியர் தொழிற்சங்கம் அவ்வேளை குற்றம் சாட்டியிருந்தது. பயிற்சின்போது அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கர்ணல் மற்றும் கப்டன் தரங்களிலான படிநிலைகள் ஜனாதிபதியின் வர்த்தமானி பிரகடனம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த படியால், அவற்றை ரத்து செய்வதற்கான அறிவித்தலும் வர்த்தமானி மூலம் வெளியாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒருமாத காலத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இராணுவ முகாம்களில் வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சி இதுவரை முன்னணி பாடசாலைகளின் அதிபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
இந்த தலைமைத்துவ பயிற்சி தங்களின் ஆளுமையை மேலும் விருத்தி செய்ய உதவியதாக காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் கேப்டன் யு. எல். முபாரக் கூறுகின்றார்.
இராணுவ முகாமில் இந்த பயிற்சியை பெற்றிருந்தாலும் அதற்கு பின்னர் இராணுவத் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
பாடசாலை கடமை நேரத்தில் வழமையான உடைகளிலேயே தாங்கள் கடமையாற்றுவதாகவும் பாடசாலை வைபவங்களில் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இராணுவ சீருடையை தாங்கள் அணிவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.