முதலமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் -அமைச்சர் ஹசன் அலி
தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை எடுத்திருப்பதனால் கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியினை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_883.html

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில் சிக்கல் நிலை எழுந்துள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்தாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை உள்ளது. எனினும் கூட்டமைப்பினர் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்தாலும் நாம் அவர்களுக்கு ஆதரவளித்து செயற்படத் தயாராக உள்ளோம்.
முதலமைச்சுப் பதவியினை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம். அதற்கமைய இப்போது கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவி எமக்கு வழங்கப்படுவதே நியாயமானது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது முதலமைச்சுப் பதவியினை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு பல காரணங்களையும் கூட்டமைப்பினர் முன்வைக்கின்றனர். நாம் தேசிய அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருப்பதனால் கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியினை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிப்பது அர்த்தமற்ற கருத்தாகும்.
கிழக்கு மக்களிடம் நாம் முகங்கொடுக்க வேண்டுமாயின் கிழக்கின் ஆதிக்கம் எம்மிடம் இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் நியாயமாக இருக்கலாம். அதே போல் எமக்கும் எம் பக்க காரணங்கள் நியாயமானதே.
எனவே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க கூட்டமைப்பு தயாரெனின் அமைக்க முடியுமெனின் நாம் ஆதரவளித்து செயற்படவும் தயாராகவே உள்ளோம். முதலமைச்சுப் பதவியினையும் அவர்களே எடுத்துக் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிகள் எதையும் ஏற்க மாட்டோம். நாம் வெறும் உறுப்பினர்களாகவே இருக்கின்றோம். ஆனால் ஆதரவளித்து செயற்படவும் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.