ஊழல்,மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் : நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான புதிய சட்டங்களை விரைவில் பாராளுமன்றத்தில்...


தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களென்றும் அதற்காக விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆட்சியில் 2100 கோடி ரூபா ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுவதுடன் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்களுக்கு எதிராகவும் ஊழல்,மோசடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவை தொடர்பாக நீதியமைச்சின் வகிபாகம் எவ்வாறு இருக்கும் என கேட்ட போதே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
கடந்த கால ஆட்சியில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக முறைப்பாடுகள் தினம் தினம் கிடைத்து வருகின்றன. நாட்டு மக்களின் பணத்தை சூறையாடியவர்களை சும்மா விட முடியாது.
நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாத சட்டம் ஒழுங்குடனான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சி மாற்றத்தை ஐ.தே. க. தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
எனவே மக்களுக்கு நாம் வழங்கிய உறுதி மொழிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிப்போம். இதன் போது உயர்மட்டம், கீழ்மட்டம் என தராதரம் பார்க்க மாட்டோம். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே ஆகும். குற்றம் செய்தோர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எனது தலைமையிலும் உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களிலும் தலா 8 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான பொறுப்பு லஞ்ச ஊழல் திணைக்களத்திடமும் இரகசிய பொலிஸாரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனூடாகவும் விசாரணைகள் நடாத்தப்படும். எனவே மோசடிகளில் ஈடுபட்டோர் எவராயினும் தப்பிக்க முடியாது போகும். அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
அது மட்டுமல்லாது இம் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்காக புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டு அவசரமாக நிறைவேற்றப்படவுள்ளன.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு அதற்காக அந்தந்த நாடுகளின் ஒத்துழைப்பையும் பெறவுள்ளோம்.
விசேடமாக இந்தியாவின் மத்திய வங்கியின் உதவி நாடப்படும். தற்போது சீசெல்ஸ் நாடும் இதற்கான ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
போதைப்பொருள்
போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை போன்றவற்றை தடுப்பதற்கு தற்போது நாட்டிலுள்ள சட்டங்கள் போதுமானவை. ஆனால் அச்சட்டங்கள் இது வரையில் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை. இனிமேல் சட்டங்கள் சரியான வழியில் நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக எமது அமைச்சின் கீழ் விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அரசியல் கைதிகள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பிலும் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விசாரணைகளும் துரிதப்படுத்தப்படும். குற்றமற்றவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள்.
ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களில் மட்டுமல்லாது பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை அரசிற்கு நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியுமென்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்