அரபு வசந்தம், ஐ.எஸ்.ஐ.எஸ். ஏமன் புரட்சி.. புதிய செளதி மன்னர் சல்மான் முன்னுள்ள சவால்கள்
ரியாத்: செளதியின் புதிய மன்னராகி இருக்கும் சல்மான் ஆட்சிக் காலத்தில் அரபு வசந்தம், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் மற்றும் அண்டை நாடான ஏமனில் உருவாகியிர...

செளதியின் புதிய மன்னரான சல்மான் 1935ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது செளதியின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மறைந்த மன்னரின் வாரிசாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் என பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்.
ரியாத் மாகாணத்தின் ஆளுநராக 48 ஆண்டுகாலம் பதவி வகித்தார். அப்போது நல்ல நிர்வாகத்தைக் கொடுத்து ஊழலற்ற ஆட்சியை நடத்தினார்.
அத்துடன் 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான ஆப்கான் முஜாஹிதீன் இயக்கத்துக்கு மாதந்தோறும் 25 மில்லியன் டாலர் நிதி உதவி கொடுத்து வந்தார் சல்மான்.
மேலும் செர்பியாவில் போஸ்னியா முஸ்லிம்கள் உள்நாட்டு யுத்தம் நடத்துவதற்கும் நிதி உதவி அளித்தவரும் தற்போதைய மன்னராகி இருக்கும் சல்மான் தான்.
அமெரிக்காவுடன் நெருக்கமான நட்பு சக்தியாக இருப்பவர் சல்மான். இவரது மகன்களில் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் பங்கேற்றவரும் கூட.
சல்மானின் குடும்பம்தான் செளதியின் பெரும்பாலான ஊடகங்களை தம் வசமும் வைத்திருக்கிறது.
தற்போதைய மன்னர் சல்மானுக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு அடுத்த மன்னராக 2013ஆம் ஆண்டே இளவரசர் முக்ரின் அறிவிக்கப்பட்டார். அவர் இங்கிலாந்தின் ராயல் ஏர் போர்ஸ் கல்லூரியில் படித்தவர். செளதி விமானப் படையிலும் பணியாற்றினார். பின்னர் மெதீனா மாகாண ஆளுநராகவும் செளதியின் உளவுத்துறை தலைவராகவும் பணியாற்றினார்.
மன்னாராகியிருக்கும் சல்மானும் அவருக்குப் பின்னர் மன்னாராகும் முக்ரினும் எதிர்கொண்டுள்ள சவால்கள் கடினமானவை. சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை செளதியின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதேபோல் இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை அமைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் செளதிக்குள் காலூன்ற முயற்சிக்கலாம்.
தற்போது அரபு நாடுகள் 'அரபு வசந்தம்' என்ற புரட்சியால் ஆட்சி மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த தாக்கம் செளதிக்குள் நுழையாதவகையில் மன்னராக இருந்த அப்துல்லாவுடன் இணைந்து நடவடிக்கைகளள மேற்கொண்டவர் சல்மான். இருப்பினும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் போனால் நிச்சயம் அரபு வசந்தம் செளதியையும் எட்டிப்பார்க்கும் என்பதையும் உணர்ந்தவராகத்தான் சல்மான் செயல்படுவார் என்றே கூறப்படுகிறது.
அண்டை நாடான ஏமனில் செளதி ஆதரவு அரசு கவிழ்ந்து போனது மற்றொரு முதன்மையான சவாலாக இருக்கும். ஏமன் அதிபராக இருந்த அப்ரப்டு, அல் கொய்தா இயக்கத்தை நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் தற்போது அமெரிக்கா எதிர்ப்பு சியா முஸ்லிம்கள் கையே ஏமனில் ஓங்கி இருப்பது செளதிக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும். இவைதான் புதிய செளதி மன்னர் சல்மானுக்கு கடும் நெருக்கடியாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.