ஹிட்லர் ஆட்சிக்கு இடமளிக்க முடியாது; உயிர் துறக்கவும் தயார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிர...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொண்டமை தொடர்பாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் முழுவடிவமாக;

திடீரென விலகியமைக்கான காரணம்

2005,2010 ஆகிய தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக நானும், எனது கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் பெரும் பங்காற்றிருக்கிறோம். அவரது வெற்றியிலேயே அதிகளவு பங்களிப்பினை நாங்கள் வழங்கியுள்ளோம்.

2005 தேர்தல் வெற்றியின் பின் இந்த தரப்பிலே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் பங்கினை நாங்கள் பொறுப்பெடுத்தோம்.

மாவிலாறிலிருந்து தொப்பிக்கலை வரை சென்று, அதன் பிறகு முள்ளிவாய்கால் வரை சென்று, மெனிக்பாமில் அந்த மக்களைக் குடியேற்றி அங்குள்ள மிதிவெடிகளையும் அகற்றி அந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக மிகப் பாரிய பங்களிப்பினை எமது கட்சி செய்தது.

ஜனாதிபதி வெற்றிக்கு ஒத்துழைப்பு

2010 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக மிகப்பெரும் எடுப்பில் எமது கட்சி பாடுபட்டது. 40% முஸ்லிம்களது வாக்குகளை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுத்தோம். அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கட்சியும் அப்போது அரசுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

யுத்தத்தினை வெற்றி கொண்டவன் என்ற வகையில் ஜனாதிபதிக்கு மிகப்பெரும் வெற்றி அப்போது கிடைத்தது. இந்த வெற்றியின் பின் அவர் சகல இன மக்களுக்கும் சமமான, நீதியான, நேர்மையான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தோம். யுத்த வெற்றியின் பின் சகல இன மக்களினதும், நாட்டினதும் முன்னேற்றம் கருதி அவர் பாடுபடுவார் என்றும் எதிர்பார்த்தோம்.

ராஜபக்ஷ செயற்பாடுகளில் திடீர்மாற்றம்

அபரீமிதமான யுத்த வெற்றியின் பின் மிகப்பெரும் வாக்குவித்தியாசத்தில் வெற்றியீட்டியதையடுத்து இவரின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. சிறுபான்மை குறித்த அவரது செயற்பாடுகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை.

இனரீதியான போக்குகளும் அவரிடம் காணப்பட்டன. என்றாலும் இவற்றுக்கெதிராக உள்ளேயிருந்து போராடினோம்.பல்வேறு முயற்சிகளைச் செய்தோம். இது தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினோம். அந்த முயற்சிகள் ஒன்றும் கை கூடவில்லை .

இன ரீதியான செயற்பாடு

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு இரண்டாவது வெற்றியின் பின் இனவாத அரசாக தனது நிறத்தை மாற்றிக்கொண்டது. சிங்கள கடும் போக்காளர்களின் சொல் கேட்டு அதன்படி செயலாற்றும் அரசாகவும் செயற்பட்டது. இந்த நாட்டு சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.

இனவாத, மதவாதத்தைத் தூண்டும் அரசாக அதன் மூலம் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் அரசாக மஹிந்த ராஜபக்ஷ அரசினை நோக்கினார்கள். மக்களுக்கு மட்டுமல்ல எமக்கும் அரசின் மாற்றமான செயற்பாடுகள் தெளிவாகத் தெரிந்தன.

முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்

தம்புள்ளையில் ஆரம்பித்த பள்ளிவாசல் விவகாரம் கிரான்ட்பாஸ்வரை தொடர்ந்தது. முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் வன்முறைகள் வெடித்தன. ஹலால்பிரச்சினை, அபாயா, நிகாப்பிரச்சினை, குர்பான்தடை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகம் முகம்கொடுத்தது. இச்சம்பவங்கள் குறித்து பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பினோம்.அமைச்சரவையில் போராடினோம். ஜனாதிபதியுடன் முரண்பட்டு வெளியேறும் அளவுக்கு எமது போராட்டம் தொடந்தது.

இனவாதிகளின் அப்பட்டமான இனவாத நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரினோம். இந்த இனவாத செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கும் பொது பல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரினோம். முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஆட்டம் போடுகின்ற இந்தக் கூட்டத்தை அடக்குவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொண்டோம்.

இந்தத் தரப்பில் பொதுவான சட்டம் இருக்கிறது. இது அனைவருக்கும் சமம்.இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட மதகுருமார்களுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் நாளுக்கு நாள் அவர்களது இனவாத செயற்பாடுகள் அதிகரிக்கச் செய்தன.

முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை

இந்த நாட்டில் மிக அமைதியாகவும் ஐக்கியமாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக முன்னொருபோதும் இல்லாத அச்சநிலை மேலோங்கியுள்ளது. முஸ்லிம்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத பீதயான நிலைமை, முஸ்லிம் பெண்கள் தமது கலாசார ஆடைகளை அணிந்து கொள்ள முடியாத நிலைமை, ஹலால், குர்பான் செயற்பாடுகளுக்கு தடை விதித்தல் போன்ற இனவாத செயற்பாடுகளை இனவாதிகள் மிகத்தீவிரமாக மேற்கொண்டதால், மிகப்பெரும் அச்சநிலையை முஸ்லிம்கள் எதிர்கொண்டார்கள். அடுத்து என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற அச்சம் முஸ்லிம்களை வாட்டியிருந்தது.

ஒன்று சேர்ந்து போராடினோம்

பொது பல சேனா உட்பட இனவாத அமைப்புகளின் தீவிர செயற்பாடுகளுக்கெதிராக தனிப்பட் முறையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தேன்.அது கைகூடாததால் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக இணைந்து போராடினோம்.

இனவாத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துமாறு சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். ஜனாதிபதியோடு பலமுறை தொடர்பு கொண்டு எமக்கு சந்திப்புக்கான வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டோம். என்றாலும் அவர் எங்களை கணக்கெடுக்காது செயற்பட்டார். கடைசியாக பதுளையில் வைத்து எம்மைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இனரீதியான செயற்பாடுகள், முஸ்லிம்களின் அச்ச நிலை பற்றித் தெரிவித்தோம்.

தடுத்து நிறுத்துவேன் வாக்குறுதி தந்தார்.

பொது பல சேனாவின் செயற்பாடுகளைக் கட்டுப் படுத்துவேன். சட்டநடவடிக்கைகளை எடுப்பேன் என, எம்மிடம் உறுதியளித்தார். பள்ளிவாசல் தாக்கப்படல் உட்பட ஏனைய இனவாத செயற்பாடுகளை இதன் பிறகு நிகழா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சொன்னார். என்றாலும், அவர் பொது பல சேனாவினைக் கட்டுப்படுத்தவும் இல்லை. அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

ஹிட்லர் ஆட்சி நடக்குமோ?

இரண்டாவது முறை வென்று இந்தளவு இனவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கும் நிலையில் மூன்றாவது முறை வென்றால் இனவாதிகள் எந்தளவு தூரம் ஆட்டம் போடுவார்கள் என்பது குறித்தும் சிந்தித்தோம். எவருக்கும் தலை சாய்க்காது ஹிட்லர் போன்று செயற்படுவோர் என்ற அச்சம் எம்மை எதிர்கொண்டது. இந்த அச்சநிலைமையும் கூட அரசிலிலிருந்து வெளியே செல்லக் காரணமாய் அமைந்தது.

முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச்செய்ய மாபெரும் பங்களிப்பினை வழங்கியிருந்தும் எம்மை ஒதுக்கித்தள்ளும் அளவுக்கு அவரது செயற்பாடுகள் காணப்பட்டன. பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் இல்லாத நிலையில் நானும், அமீர் அலி மற்றும் சகோதரர் ஹமீத் ஆகியோர் அவருடன் இணைந்து அறுதிப் பெரும்பான்மைக்கு வழி செய்து கொடுத்தோம்.

தேர்தல்களில் 1.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எமது பெரும் பங்களிப்பினை அரசுக்குப் பெற்றுக்கொடுத்தோம். அவரது வெற்றியிலேயே இருந்தோம். சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் மிகப்பெரும் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொடுத்தோம். இத்தனை என்றாலும், அவர் எங்களை கைவிட்டு விட்டார். என்றாலும் பொறுமையுடன் இருந்தோம்.

தேசியப்பட்டியலுக்கான வாக்குறுதி

தேர்தல் வெற்றியின் பின் சகோதரர் அமீர் அலிக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் தருவதாகச் சொன்னார். பின் மாகாண சபைத் தேர்தலின் பின் தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதியளித்ததுடன், சகோதரர் ஹிஸ்புல்லாவை முதலமைச்சர் ஆக்குவதாகவும் குறிப்பிட்டனர். இவ்வாறு எமது கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள், உடன்படிக்கைகளை மீறுகின்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசு செயலாற்றியது.

என்றாலும் கூட பொறுமை காத்து இந்த அரசினுள் இருந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் இருந்தோம். இந்த நாட்டின் பொருளாதாரம் உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கும் பங்காற்றினோம்.

வரலாற்றில் துவேசமான அரசு

இந்தளவு முஸ்லிம்கள் இந்த அரசுக்கு பங்களிப்புச் செய்த போதிலும் இனவாதிகளுக்கு ஆதரவாகவே அவர் செயற்பட்டார். இனவாதத்தோடு செயலாற்றினார். பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புகளுக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்கினார். இந்த நாட்டு வரலாற்றில் கூட இவ்வாறானதொரு இனவாத அரசாங்கத்தினை தான் கண்டதில்லை. அந்தளவுக்கு மேசமான முறையில் செயற்பட்டார்கள்.

அளுத்கம சம்பவத்தின் போது அல்ஜெஸீரா தொலைக்காட்சிக்கு போட்டியளித்த ஜனாதிபதி, இந்தச்சம்பவம் முஸ்லிம் இளைஞர்களாலேயே தூண்டப்பட்டது. எனக் குறிப்பிட்டார். இது ஒரு சிறிய சம்பவமென மறுதலித்தார். இச்சம்பவம் இந்த தரப்பின் 20இலட்சம் முஸ்லிம்களின் உள்ளங்களிலே இன்றும் ஒரு அழியாத வடுவாக இருந்து வருகிறது. அந்த நாள் ஒரு கருப்பு நாளாக முஸ்லிம் சமூகத்தினரிடையே பேசப்படுகிறது.

இவரை மீண்டும் ஜனாதிபதியாக்க முடியாது

நாட்டு மக்களுக்காக பொதுவாக செயற்பட வேண்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதிகளின் சொற்படி நடந்துள்ளார்.இனியும் நடக்கத்தான் போகிறார். இப்படியானதொரு பின்னணியில் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கினால் நிலைமை எப்படியிருக்கும். இது குறித்து முஸ்லிம் சமூகம் சிந்திக்கிறது.

மிகப் பெரும் அமைச்சுப் பதவியைத் துறந்தேன்.

இந்த நாட்டின் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சருக்கும் கிடைக்கப்பெறாத மிகப்பெரும் அமைச்சுப்பதவி எனக்குத் தரப்பட்டிருந்தது. இந்தப் பலமான அமைச்சின் மூலம் சேவைகளைச் செய்வதற்காக வசதி வாய்ப்புகளும் எமக்கு வழங்கப்பட்டது. முடியுமான முறையில் முஸ்லிம் சமூகத்திற்கான எனது பணிகளை முன்னெடுத்தேன்.

என்றாலும் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளைப் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியவில்லை. எனவே, எனது சமூகம் முக்கியமா? அமைச்சுப்பதவி முக்கியமா? என்பதை சீர் தூக்கிப்பார்த்தேன். பின் சமூகத்தின் இருப்புக்கு பாதுகாப்புக்காக வேண்டி எனது அமைச்சுப்பதவிகளை தூக்கி எறியத்தீர்மானித்தேன். எனது அமைச்சுப்பட்டம், பதவிகள், பாதுகாப்பு உட்பட அனைத்தையும் துறந்து விட்டு வெளியேறிவிட்டேன்.

முழுப்பாதுகாப்பும் மீளப்பெறப்பட்டது

எனது பாதுகாப்புக்கென பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்தார்கள். நான் அமைச்சுப்பதவியைத் துறந்ததும் அதில் 43 பேரை மீளப்பெற்று இரண்டு பேரை மாத்திரம் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள்.

என்னையும் பிள்ளைகளையும் துரத்துகிறார்கள்.

இப்போது என்னையும், எனது பிள்ளைகளையும் மோட்டார்சைக்கிள்களில் வருபவர்கள் பின் தொடர்கிறார்கள். நான் எங்கு செல்கிறேன், எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறேன் என்பதைக் கண்காணிக்கிறார்கள். எனதும், பிள்ளைகளினதும் பாதுகாப்பு மிக அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது. மிகவும் சின்னத்தனமாக நடந்து கொள்கிறார்கள். நான் வெளியேறப் போவதை அறிந்து எனக்கு தூது அனுப்பினார்கள். உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனப் பயமுறுத்தினார்கள்.

உயிருக்கு ஆபத்து, மஹிந்தவே பொறுப்பு

எனது உயிருக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எந்த நேரமும் நான் இனவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடும். மிகவும் அச்சமான இக்கட்டானதொரு பயங்கரமான நிலையில் நான் உள்ளேன். என்றாலும் நான் இந்தப் பயமுறுத்தல்களுக்கு அஞ்சி ஒதுங்கப் போவதில்லை. எனது மக்களுக்காக உடன் பிறப்புகளுக்காக எனது உயிரைக் கூட அர்ப்பணிப்புச்செய்ய தயாராக இருக்கின்றேன்.

இந்தப் போராட்டத்தில் உயிர் போய் 20இலட்சம் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ முடியும் என்றால் அதற்காக நான் எனது உயிரை விடுவதற்குத்தயாராக உள்ளேன். என்றாலும் அந்த இறைவன் என்னையும், எனது மக்களையும் எனது கட்சியையும் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஒன்றுபடுங்கள், ஒத்துழைப்பு வழங்குங்கள்

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் எமது சமூகத்தின் வெற்றிக்காக பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் ஒற்றுமைப்படுவோம். சிங்கள, தமிழ்,முஸ்லிம் பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் மாற்றமொன்றுக்குத் தயாராவோம்.

உலமாக்களே. புத்திஜீவிகளே, முஸ்லிம்களே நல்ல தலைமை வருவதற்காக துஆ செய்யுங்கள். பயமுறுத்தி, அச்சுறுத்தி,கொலைகளைச் செய்தாவது வெற்றியீட்ட வேண்டுமென்று வெறியோடு செயற்படுகிறார்கள். ராஜபக்ஷ ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். பயமுறுத்தல்களுக்கு அடி பணியாது செயற்படுவோம்.

சமூகத்தை காட்டிக்கொடுக்க முயற்சி

எம்மைச்சேர்ந்த சிலர் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். கட்சியின் முக்கிய பிரமுகர்கள், உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு கட்சித்தலைமைக்கு எதிராகவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும் அறிக்கைகளை விடுமாறு @காரிவருகின்றனர். தேசிய அமைப்பாளர் ஹிஸ்புல்லா ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிகிறேன்.

Related

இலங்கை 8382588861283861648

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item