பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரையில் ஒத்தி வைப்பு
பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த உத்தேச பிரேரணை இரண்டாம் வாசிப்பின் பின்னர் இவ்வாற...


19ம் திருத்தச் சட்டம் குறித்த உத்தேச பிரேரணை இரண்டாம் வாசிப்பின் பின்னர் இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 19ம் திருத்தச் சட்டம் குறித்த பாராளுமன்ற விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடாது எனக் கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதனால் பாராளுமன்ற அமர்வுகளில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தை முடிவுறுத்தி நாட்டுக்கு கீர்த்தியை ஏற்படுத்திக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்துவது கண்டிக்கப்பட வேண்டியது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியை அழைத்து விசாரணை நடத்துவதில்லை என அரசாங்கம் உறுதிமொழி வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, தினேஸ் குணவர்தன, சஜின் வாஸ் குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, உதித்த லொக்குபண்டார உள்ளிட்ட சிலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.