தோனிக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என வசைபாடியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெற்றிருக்கவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தோனி யுவராஜை அணியில் சேர்த...


தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தோனி யுவராஜை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு யுவராஜ் சிங், ஒவ்வொரு பெற்றோரையும் போல என் தந்தையும் உணர்ச்சிவசப்படுகிறார். நான் கண்டிப்பாக மகியின் – (மகேந்திர சிங் தோனி) தலைமையில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில், உலகக்கிண்ண தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. தற்போது தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனியை வசைபாடியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், தோனி திறமையற்றவர். ஊடகங்கள்தான் அவரை கிரிக்கெட்டின் கடவுளாக மாற்றி வைத்துள்ளன. அதற்கான எந்த தகுதியும் தோனிக்கு கிடையாது. ஒன்றுமில்லாமல் இருந்த தோனியைத் தூக்கி வைத்த ஊடகங்களையும் தோனி தற்போது மதிப்பதில்லை, அவருக்காக கை தட்டிய இந்திய ரசிகர்களையும் அவர் மதிப்பதில்லை. எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார். தோனி அகங்காரம் மிக்கவர். இராவணன் எப்படி அகங்காரத்தால் வீழ்ந்தானோ, அதேபோல, தோனியும் ஒருநாள் வீழ்வார், என யோக்ராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒருநாள் தோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும், அன்று அவருக்காக யாருமே உதவிக்கு வரமாட்டார்கள் எனவும் யோக்ராஜ்சிங் கூறியுள்ளார்.