பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், தனது 80 வயதில் சென்னையில் நேற்று (08) இரவு காலமானார். பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_420.html

பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன், சென்னை கே.கே. நகர் நாகாத்தம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நேற்று (08) இரவு எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்தார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதை பெற்ற 2 ஆவது தமிழ் எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றவர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பலவற்றில் கால் பதித்தவர்.
1934 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமல் 5 ஆம் வகுப்புடன் தனது படிப்பை முடித்துக்கொண்டார். பின்னர், விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்த அவர், சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
சமூக நலனில் அக்கறையும், இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட ஜெயகாந்தன் ‘வாழ்க்கை அழைக்கிறது’, ‘கைவிலங்கு’, ‘யாருக்காக அழுதான்?’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கங்கை எங்கே போகிறாள்?’ உள்ளிட்ட பல நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ அவரது சிறந்த நாவல்களில் ஒன்றாகும் இந்த நாவலும், ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவலும் திரைப்படமாக வெளிவந்தன. இதில், ‘உன்னைப்போல் ஒருவன்’ சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ம பூஷண் விருது, சாகித்ய அகடமி விருதையும் அவர் பெற்றுள்ளார்.
மரணம் அடைந்த ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபலட்சுமி என்ற இரு மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர்.