காலை வாருகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி! - ஐதேக குற்றச்சாட்டு.
19ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காலைவாரும் செ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_192.html

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், இடதுசாரி கட்சிகளும் இழுத்தடிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயமென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கவலை வெளியிட்டார்.
அமைச்சரவை, கட்சித்தலைவர்கள், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே 19ஆவது அரசியலமைப்பை கொண்டுவர தீர்மானிக் கப்பட்டது. அவ்வாறே, ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் 19ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பத்தரமுல்லை, செத்சிரிபாய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்தது. எனினும் அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் இந்த முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோஷத்தை ஒவ்வொரு தேர்தலிலும் தெரிவித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் களத்தில் இறங்கியது. இதற்கு ஜாதிக ஹெல உறுமய உட்பட மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைத்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு 19ஆவது அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் பாராளுமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டது.
அந்த அடிப்படையிலேயே தற்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்கி 19ஆவது அரசியலமைப்பை கொண்டு வரப்படுகிறது. இதற்காக 18ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு 19ஆவது அரசியலமைப்பை வலுப்படுத்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு சகல அரசியல்கட்சிகளின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டிய போதும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்திலே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென ஆசைப்படுகிறார்.
35 வருடமாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இடதுசாரி கட்சிகள், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வந்த போதிலும் தற்போது இதற்கு எதிராக செயற்படுவது வேதனைக்குரிய விடயம்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப் பெற்றதும் 9, 10ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது. பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 19ஆவது திருத்தம் சட்டமூலமாக்கப்படும். அவ்வாறு தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


Sri Lanka Rupee Exchange Rate