பாகிஸ்தானுக்கு 110 போர் விமானங்களை வழங்கவுள்ள சீனா!
பாகிஸ்தானுக்கு 110 அதி நவீன போர் விமானங்களை வழங்குவதற்கு சீனா முன்வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் சீன அதிபர் ஜீ...
http://kandyskynews.blogspot.com/2015/04/110.html
பாகிஸ்தானுக்கு 110 அதி நவீன போர் விமானங்களை வழங்குவதற்கு சீனா முன்வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புத் துறை, பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 3 இலட்சம் கோடி பெறுமதியான 51 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டிருந்தன. இதையடுத்தே சீன நாளிதழ்களில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் அதிநவீன JF-17 thunder ரகத்தைச் சேர்ந்த 110 போர் விமானங்களில் 50 விமானங்கள் முதற்கட்டமாக அடுத்த 3 ஆண்டுகளில் வழங்கப் படவிருப்பதாக சீன நாளிதழ்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஏற்கனவே இந்த ரகப் போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழிநுட்பத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த பெண் சமூக நல உரிமை ஆர்வலரான 40 வயதாகும் சபீன்மக்மூத் என்பவர் தனது தாயாருடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி விட்டுத் தப்பிச் சென்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப் பட்ட போதும் துரதிர்ஷ்டவசமாக சபீன்மக்மூத் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அவரின் தாயார் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த இவர் சுட்டுக் கொல்லப் பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இது குறித்த விசாரணைக்கு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. |