மகிந்த இனவாத்தை தூண்ட முயற்சித்து வருகிறார் -அனுரகுமார
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதை தடுக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருப்பதாக...

மகரகமவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த தேர்தலில் தோற்று வீட்டுக்கு சென்று சும்மா இருக்கவில்லை. அவர் ஈழம் பற்றிய கதைகளை பேசி இனவாத்தை தூண்ட முயற்சித்து வருகிறார்.
மகிந்தவின் நிழல் மற்றும் மடி இல்லாமல் இருக்க முடியாத தினேஷ், வாசுதேவ, கம்மன்பில, விமல் வீரவன்ஸ ஆகியோருக்கே மீண்டும் மகிந்த தேவைப்படுகிறார்.
காரணம் கடந்த 25 வருட அரசியல் வரலாற்றில் தினேஷ், வாசுதேவ ஆகியோர் தமது கட்சிகள் ஊடாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றதில்லை.கம்மன்பிலவுக்கு கட்சியே இல்லை. வீரவன்ஸ பற்றி பேசி இந்த பிரயோசனமும் இல்லை.
இவர்களுக்கு தமக்கென ஒரு கட்சியில்லை. மக்கள் செல்வாக்கும் இல்லை. அரசியலில் கைவிடப்பட்டவர்களான இந்த அணியில் மகிந்தவை மீண்டும் கொண்டு வர துடிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச, சுமணதாச ஆகியோர் இணைந்து தேர்தல் ஒன்றை நடத்தி, மகிந்த அதில் தோல்வியடைந்தார். இதனால், மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி அவர் சிந்திக்க தேவையில்லை.
9 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்து, நிதி, அரசியல், ஊடகம் என அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து தோல்வியடைந்தார் என்றால், மக்களின் ஆணைக்கு தலைவணங்கி அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது, அதில் தோல்வியடைந்தால் தென் மாகாண சபைக்கு போட்டியிடுவது அதிலும் தோல்வியடைந்தால் தங்காலை பிரதேச சபைக்கு போட்டியிடுவது அதிலும் தோல்வியடைந்தால், கூட்டுறவு தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கும் உரிமை மகிந்தவுக்கு உள்ளது.
வீட்டுக்கு சென்ற பின் ஓய்வெடுங்கள் என்றுதான் நாங்கள் அவரை கேட்கிறோம். இதனை விடுத்து மீண்டும் நாட்டில் இனவாதத்தை தூண்ட வேண்டும். அரசியலுக்கு அதனை அடிப்படையாக பயன்படுத்த வேண்டாம். இந்த நாடு 30 ஆண்டுகள் இனவாதத்தினால் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
மகிந்த மீண்டும் அரசியலுக்கு வருவாரேயானால், இனவாதத்தை தவிர்த்து விட்டு, அவரது 9 வருட ஆட்சியில் செய்த பொருளாதார பணிகள், ஜனநாயகம், அரசியல் கலாச்சாரம் பற்றி பேச முடியும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.