குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பைத் தேடிச் செல்லும் பெண்களின் பல்வேறு சோகக் கதைகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெளிநாடு சென்று ஒரு வித தொடர்புமற்ற நிலையில் காணாமல் போயிருந்த பெண்ணொருவர் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த உணர்வுபூர்வமான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி. தலதா அத்துகோறள தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உறவினர்களுடன் தொடர்பற்றுப் போய் சவுதி அரேபியாவில் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் கடந்த 13 வருட முயற்சியின் பலனால் நாடு திரும்பிய அநுராதபுரம், இப்ளுகமவைச் சேர்ந்த 47 வயதான தமயந்தி என்ற பெண்ணுக்கு அமைச்சரினால் ரூ.21 லட்சம் பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
தான் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற போது ஐந்து குழந்தைகளுக்குத் தாயாக இருந்த அவர், தற்போது நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவரது இரு குழந்தைகளுக்கு ஏற்கனவே திருமணமாகியிருப்பதாகவும் தான் போகும் போது குழந்தைகளைத் தங்கையிடம் ஒப்படைத்துச் சென்றதாகவும் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகவர்களற்று தனித்துப் போயிருந்த பெண்ணை அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்கள் வெளியுலகத் தொடர்பில்லாத நிலையில் வைத்திருந்ததாகவும் பணியக அதிகாரிகளின் தீவிர முயற்சியால் வீட்டு உரிமையாளரிடமிருந்து அவருக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியும் (ரூ.21 லட்சம்) பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் தங்கை இங்கு தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.