மு.கா குழு – ஜனாதிபதி சந்திப்பு: வாகனப் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை நண்பக...


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கட்சியின் சார்பில் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதுடன் தலைவரின் வேண்டுகோளின் பேரில் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் முன்வைத்து உரையாற்றினார்.
இதன்போது 100 நாள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து சில தெளிவுகளையும் முதல்வர் நிஸாம் காரியப்பர் கோரினார். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால பதிலளித்ததுடன் சில விடயங்களையும் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அவர்களது வாகனப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டு அதற்கான ஒத்துழைப்பு கோரப்பட்டது. இது விடயத்தில் தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால உறுதியளித்தார் என இச்சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.