இ லங்கையின் மீயுயர் நீதிமன்றம் என்றழைக்கப்படும் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன், சிறிசேன அரசால் நியமிக்கப்ப...
இலங்கையின் மீயுயர் நீதிமன்றம் என்றழைக்கப்படும் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன், சிறிசேன அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.இது மிகப் பெரிய முக்கிய நிகழ்வாக அந்நாட்டு மக்களாலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் கவனிக்கப்படுகிறது.
காரணம் பல தலைமுறைகளாகப் பூர்வீகக் குடிகளாக இருந்தும்,தேயிலைத் தோட்டங்களின் பாட்டாளிகளாய் இருந்தும் அரசியல் அதிகாரம் இன்றியும் அல்லல்படும் இனம் ஈழத்தமிழ் இனம். பெரும்பான்மையினரான சிங்கள சமுதாயம் இழைத்த துன்பங்கள் சொல்லில் அடங்காது.
தங்களையும், தங்களது இருப்பையும் காப்பாற்றிக் கொள்ள அகிம்சை வழியிலும், ஆயுதங்களைத் தாங்கியும் தலைமுறைகள் பல கடந்தும் போராடிய ஈழ மக்கள் இறுதியில் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டனர். அந்த மாபாதகம் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் கைங்கரியத்தால் `செம்மையாகவே` நடந்தேறியது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இலங்கை அரசின் அதிபர் தேர்தலில்
.jpg)
படுதோல்வியடைந்தார் ராஜபக்சே. அவரை மைத்திரி பால சிறிசேன தமிழர்களின் `பலத்தால்` தோற்கடித்தார். கொலை வெறி அரசியலுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.
தேர்தல் பிரசாரத்தில் மக்கள் முன்னிலையில் வைத்த வாக்குறுதிகளில் படிப்படியாக நிறைவேற்ற முனைப்போடு சிறிசேன செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீபவன் அமர்த்தப்பட்டுள்ளார். இலங்கைத் தீவின் நீதிமன்ற வரலாற்றில் கடைசியாகக் கடந்த 1984-ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய சுப்பையா சர்வானந்தா தான் இந்தப் பதவியில் இருந்த முதல் தமிழர்.
அந்தப் பதவியை ஸ்ரீபவன் 27ஆண்டுகள் கடந்த நிலையில், 44 ஆவது தலைமை நீதிபதியாகத் தமிழ் வம்சாவளியான 63 வயதான ஸ்ரீபவன் அலங்கரித்துள்ளார். இது சாதாரணம் இல்லை என்பது வருட கணக்கே தெளிவுப்படுத்துகிறது.
முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு அளித்ததால், கடந்த 2013 ஆம் ஆண்டு சொத்துக்கணக்கைச் சரியாகக் காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டி தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்சே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்து அதிர்ச்சியளித்தார்.
அதனையடுத்து அவருக்கு மிகவும் நெருக்கமான மோகன் பெரிஸ் என்பவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜபக்சே நியமித்தார். ராஜபக்சே தேர்தல் தோல்வியால் வீட்டுக்கு அனுப்பப் பட்டபிறகு, "கண்ணியமாக தலைமை நீதிபதி பதவியை விட்டு விலகும்படி" மோகன் பெரிஸூக்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடிதம் எழுதி இருந்தார். தொடர்ந்து மோகன் பெரிஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என உச்சநீதி மன்ற வழக்கறிஞர் சமூதாயம் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபக்சேவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி ஷிராணி பண்டாரநாயக சட்ட விரோதமாக நீக்கப்பட்டதால், அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக்க சிறிசேன அரசு முடிவு செய்தது. இதனையடுத்து ஷிரானி பண்டாரநாயக மீண்டும் தலைமை நீதிபதியாக கடந்த புதன்கிழமை முறைப்படி பதவியேற்றுப் பின்னர், உடனடியாக ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஸ்ரீபவன் அதிபர் மைத்ரிபாலா சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
1952 ஆம் ஆண்டு பிறந்த இவர் யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகியவற்றில்
.jpg)
பயின்றார். சில காலம் தனிப்பட்ட முறையில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர், பின்னர் இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.
துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி உயர்வும் அதன் பிறகு, மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீபவன் பதவியேற்றுள்ளது தமிழர்களுக்கு ஒரு நல்ல சமிக்ஞையே. இருப்பினும் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் ஏராளமாக உள்ளன. குறைந்த பட்சம் அவர்கள் இழந்த வீடு மற்றும் நிலங்களை திருப்பி கொடுப்பது, வாழ்வாதாரத்திற்கான நிரந்தர வருவாயை அளிக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, அச்சமற்ற வாழ்வை வாழ தமிழர்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து ராணுவத்தை அகற்றுவது, தமிழர் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் என அவர்கள் மிக அதிகமாக வலியுறுத்தும் கோரிக்கைகளையாவது நிறைவேற்றிக் கொடுக்க அதிபர் மைத்ரிபாலா சிறிசேன முன் வரவேண்டும். தமிழரை தலைமை நீதிபதியாக நியமித்து விட்டேனே என்று சொல்லிக்கொண்டே, முன்னாள் அதிபர் ராஜபக்சே பாதையில் பயணிக்கக்கூடாது.
இந்த கோரிக்கைகள் நிறைவேறினால்தான், போர்க்குற்ற விசாரணை மற்றும் அதில் ஈடுபட்டவர்களை தண்டிப்பது என அடுத்தக்கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.
ஆனாலும் ஸ்ரீபவன் பதவியேற்பு, ராஜபக்சே காலத்தில் தமிழர்களை சூழ்ந்த இருள் விலகுவதற்கான ஒரு ஒளிக்கீற்றை ஏற்படுத்தி உள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம்!