பாகிஸ்தானில் பரபரப்பு சம்பவம் குண்டு வைத்தபோது வெடித்ததால் ஐ.எஸ். தலைவர் பலி
பாகிஸ்தானில் குண்டு வைத்தபோது வெடித்ததால், ஐ.எஸ். தலைவர் பலி ஆனார். கூட்டாளிகள் 2 பேரும் உயிரிழந்தனர். ஐ.எஸ். தலைவர் பாகிஸ்தான் தலீபான் இய...

பாகிஸ்தானில் குண்டு வைத்தபோது வெடித்ததால், ஐ.எஸ். தலைவர் பலி ஆனார். கூட்டாளிகள் 2 பேரும் உயிரிழந்தனர்.
ஐ.எஸ். தலைவர்
பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் 5 முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக திகழ்ந்தவர், ஹபீஸ் முகமது சயீத். ஆரக்ஜாய் ஏஜென்சி பகுதியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலீபான் இயக்கத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த சாஹிதுல்லா சாஹித் தலைமையில், சிரியாவிலும், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்தார்.
அதன் பின்னர் அவர் அந்த இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைமை வெளியிட்டது.
குண்டு வைத்தபோது வெடித்தது
இந்த நிலையில், அங்கு கைபர் பழங்குடியினர் பகுதியில் அமைந்துள்ள டைரா பள்ளத்தாக்கில், டூர் டாரா என்ற இடத்தில் நேற்று அவர் சாலையோரத்தில் குண்டு வைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதத்தில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவத்தில், ஹபீஸ் முகமது சயீத்துடன் அவரது கூட்டாளிகள் 2 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தகவலை ‘எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ ஏடு வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இதை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உறுதி செய்யவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இருப்பினும், ஹபீஸ் முகமது சயீத் பலியானதாக வெளியாகியுள்ள தகவல், பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 பேர் பலி
இதற்கிடையே ஆரக்ஜாய் ஏஜென்சியில், டைரா பள்ளத்தாக்கு– வடக்கு வாஜிரிஸ்தான் இடையே அமைந்துள்ள ஷெய்கான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், 10 பேரை சுட்டுக்கொன்றனர். 6 பேர் காயம் அடைந்தனர்.,
இந்த தாக்குதலின்போது, தீவிரவாதிகளின் 12 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு சம்பவம்
பஜாவுர் ஏஜென்சியில், பாகிஸ்தான் எல்லையில் காக்கி ராணுவ சாவடி மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால் பாதுகாப்பு படையினரும் தங்கள் துப்பாக்கிகளால் சரியான பதிலடி கொடுத்து அந்த தாக்குதலை முறியடித்தனர். அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.