மகிந்த அரசின் ஊழல், மோசடிகள் குறித்து உலக வங்கியின் ஆதரவுடன் விசாரணை!
நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உலக வங்கியின் உதவியை நாடவுள்ளது. அரச உடமைகள் ம...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_407.html
நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உலக வங்கியின் உதவியை நாடவுள்ளது. அரச உடமைகள் மற்றும் பொதுமக்களின் பணத்தை சூறையாடி பாரிய மோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்ட அதிகாரிகளை முறையான விசாரணைக்கு உட்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலக வங்கியின், களவாடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முன்னெடுப்பு செயற்திட்ட பிரதிநிதிகளை சந்தித்து உரையாடவுள்ளார்.அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அங்குள்ள முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் உலக வங்கியின், களவாடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முன்னெடுப்பு செயற்திட்ட அமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
உலக வங்கியின், களவாடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முன்னெடுப்பு செயற்திட்டத்தின் கீழ் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் மேல் மட்ட குடிமக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே வகையான விசாரணைகளை இலங்கையிலும் முன்னெடுக்க ஒத்துழைக்க வேண்டு மென்பதே இச்சந்திப்பில் அமைச்சர் சமரவீரவினால் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையாகவிருக்குமெனவும் பிரதியமைச்சர் அஜித் கூறினார்.
இலங்கையில் மோசடிகளில் ஈடுபட்ட மேல்மட்ட குடிகளுக்கு எதிராக விரிவான விசாரணையை முன்னெடுக்க உலக வங்கியின், களவாடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முன்னெடுப்பு செயற்திட்டம் நிச்சயம் எமக்கு கைகொடுக்குமென சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. சி. வெலியமுன இது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்குபற்றுவாரெனவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்கு மேலதிகமாக அமைச்சர் மங்கள சமரவீர. இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசேன் ரைஸ். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், உலக வங்கியின் தெற்காசியாவுக்கான பிரதித் தலைவர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate