ஆப்கன் தலிபான்கள் பயங்கரவாதிகள் அல்லர்: அமெரிக்கா திட்டவட்டம்
ஆப்கன் தலிபான்கள் பயங்கரவாதத் தந்திரங்களைக் கையாண்டாலும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்...


ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்கள் "ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள்' எனவும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) குழுவை "பயங்கரவாத இயக்கம்' எனவும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உதவி செய்தித் தொடர்பாளர் எரிக் ஷுல்ட்ஸ் புதன்கிழமை கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்தப் புதிய பாகுபாடு குறிந்து சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் வியாழக்கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு இணையான வழிமுறைகளை ஆப்கன் தலிபான்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
தங்களது லட்சியத்தை அடைய பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், அல்-காய்தா அமைப்பையும், தலிபான்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியம்.
தலிபான்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டாலும், அவை ஆப்கானிஸ்தானுக்குள் மட்டுமே நடைபெறுகின்றன.
எனவே, ஆப்கானிஸ்தானில் வலிமையான மைய அரசையும், ராணுவத்தையும் கட்டமைத்து, தலிபான்களை ஆப்கானிஸ்தானியர்களே ஒடுக்க உதவுவதே அமெரிக்காவின் திட்டமாகும்.
ஆனால், அல்-காய்தா அமைப்பை எதிர்கொள்ள அமெரிக்கா வேறு மாதிரியான வழிமுறைகளைக் கையாள்கிறது.
ஏனெனில், அந்த அமைப்பின் லட்சியம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்குள் அடங்கி விடவில்லை.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும், அமெரிக்கர்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த அல்-காய்தா திட்டமிட்டு வருகிறது.
எனவே, அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாகும்.
தலிபான்கள் ஆபத்தானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
அதனால்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
மேலும், அந்த அமைப்புடன் சண்டையிட்டு பல அமெரிக்க வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
எனினும், அமெரிக்காவுக்கு தலிபான்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கும், அல்-காய்தாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு என்றார் ஜோஷ் எர்னஸ்ட்.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆப்கன் தலிபான்களை பயங்கரவாதிகளாக அறிவிக்காவிட்டாலும், பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் துணை அமைப்புகளான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) அமைப்பையும், ஹக்கானி இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளது.