மைத்ரி மேல் அதீத நம்பிக்கை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி..
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த ஐந்து ஆண்டுகள் முடிந்த பின...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_9.html
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னரும், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பெயரிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.தற்போது அரசியலமைப்பில் திருத்தம் செய்துவரும் சட்ட வல்லுநர்களுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது இதுகுறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர் தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படமாட்டார் என்றும் நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அமைச்சரவையின் தலைமையில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரமுள்ள முறைமையொன்று ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
”1978ஆம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் ஆரம்பமான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைக்கு ஆரம்பம் முதலே மக்களின் எதிர்ப்பு காணப்பட்டது. ஜனாதிபதி முறையை அகற்றுவதாக தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 1994ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2005ஆம் ஆண்டிலும், 2010ஆம் ஆண்டிலும் இந்த ஜனாதிபதி முறை இரத்து செய்யப்படும் என மகிந்த சிந்தனையில் வாக்குறுதியளிக்கப்பட்டது. எனினும், அதனை செய்யவில்லை. நான் பொது வேட்பாளராக பெயரிடப்பட்ட போதும் இந்த மிதமிஞ்சிய அதிகாரங்கள் ஜனாதிபதியிடமிருந்து அகற்றப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. எமது கொள்கைப் பிரகடனத்தின் முதல் பந்தியில், முதல் வசனத்தில் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளோம். எனவே இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்னுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட வைபவத்தில் தெரிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

