ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே பாகிஸ்தானில் உயர் மட்ட பேச்சுவார்த்தை
ஆப்கான் அரச அதிகாரிகளும் தலிபான்களின் பிரதிநிதிகளும் இன்று பாகிஸ்தானில் இரு நாட்கள் திட்டமிடப் பட்டுள்ள உயர் மட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பித...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_481.html
ஆப்கான் அரச அதிகாரிகளும் தலிபான்களின் பிரதிநிதிகளும் இன்று பாகிஸ்தானில் இரு நாட்கள் திட்டமிடப் பட்டுள்ள உயர் மட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாக ஆப்கான் அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன் இது உத்தியோகபூர்வமான சமாதான செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறைத் தோற்றுவிப்பதற்கான ஓர் சமிக்ஞை என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காபூல் அரச பிரதிநிதிகளும் தலிபான்களும் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல முறை கடந்த மாதங்களில் சந்தித்திருந்தனர் என்ற போதும் காபூல் அரசு அதிகாரப்பூர்வமான உயர் மட்டக் குழுவை அனுப்பியிருப்பது இதுவே முதன்முறை என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சந்திப்பு பற்றி மூத்த ஆப்கான் அதிகாரி ஒருவர் அளித்த தகவலில் பாகிஸ்தான் இச்சந்திப்பை மத்தியஸ்தம் வகித்த போதும் அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளும் கூட இதில் பார்வையாளர்களாகப் பங்கேற்று இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த சந்திப்பில் தலிபான்களின் தலைமைத்துவத்தின் நேரடித் தலையீடு இருந்ததா என்பது குறித்து சில சந்தேகங்களும் எழுப்பப் பட்டுள்ளன. இச்சந்திப்பை வழிநடத்திய நபர் ஒருவரது கூற்றுப் படி தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய முல்லா அப்பாஸ் அக்குண்ட் தலைமையிலான 3 பேர் அடங்கிய தலிபான் குழு இதில் பங்கேற்றது உறுதி செய்யப் பட்டுள்ளது.
மேலும் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்று வரும் இப்பேச்சு வார்த்தையில் பங்கேற்க திங்கட்கிழமையே 8 உறுப்பினர்கள் அடங்கிய ஆப்கான் அரச பிரதிநிதிகள் ஐ.நா சபையின் விமானத்தில் வந்து சேர்ந்திருந்தனர். இன்றைய நிலையில் பெருமளவிலான தலிபான்களின் தலைமைத்துவம் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இருப்பதும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் புனித ரமடான் மாதத்திலும் பல தீவிரவாதத் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் ஜோஸ் நகரில் மசூதி மற்றும் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மறுபுறம் ஈராக்கின் பக்தாத்தில் ஷைட்டி மாவட்டங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 15 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
இன்னொரு புறம் திங்கட்கிழமை யேமெனில் சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதலில் பல பொதுமக்கள் உட்பட குறைந்தது 176 போராளிகள் கொல்லப் பட்டதாகவும் மார்ச் 26 இல் தொடங்கிய இந்த விமானத் தாக்குதல்களில் ஒரே நாளில் அதிகளவு மக்கள் நேற்றைய தினமே (திங்கள் ஜூலை 6) கொல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக யேமெனில் ஹௌத்திக்களுக்கு எதிரான விமானத் தாக்குதலில் இதுவரை 3000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் ISIS போராளிகளுக்கு எதிராகப் போராட சிரியாவுக்கோ ஈராக்குக்கோ மேலதிக அமெரிக்க இராணுவப் படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என அண்மையில் பெண்டகனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

