யுத்த காலத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு
யுத்த காலத்தில் கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் மாணவர்கள் கடத்திச்செல்லப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கோரப்ப...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_385.html
யுத்த காலத்தில் கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் மாணவர்கள் கடத்திச்செல்லப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கோரப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தது.
காணாமற்போன மூன்று மாணவர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையில் சாட்சியமளித்த குற்றப்புலாய்வுத் திணைக்கள தலைமை இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டி முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான நீதவான் விசாரணை இன்று இடம்பெற்றது.
கடத்தப்பட்ட மாணவர்கள் கோட்டே சைத்திய வீதியிலுள்ள நிலக்கீழ் முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டு, பெற்றோரிடம் கப்பம் கோரப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமை இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்தாரா என இதன்போது பிரதம நீதவான் சாட்சியாளரிடம் வினவினார்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அவர் அறிந்திராமல் இருக்க முடியாதென பதிலளித்த சாட்சியாளர், கடத்தப்பட்ட சிறுவர்கள் திருகோணமலை முகாமிற்கும் கொண்டுசெல்லப்பட்டிருந்ததாகக் கூறினார்.
அத்துடன், இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த மேலும் பலரையும் சாட்சியமளிப்பதற்காக அழைக்க முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமை இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், ஏனைய சாட்சியாளர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அழைக்கும் பொறுப்பையும் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டார்.

