மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி 10 இலட்சம் கையெழுத்து பெரும் வேட்டை ஆரம்பம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிறுத்த வலியுறுத்தி, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின்...
https://kandyskynews.blogspot.com/2015/02/10_26.html

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிறுத்த வலியுறுத்தி, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மகஜர் ஒன்றில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்க தீர்மானித்துள்ளார்.
கையெழுத்துக்களை பெற்று இந்த மகஜரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிடம் கையளிக்க உள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தாலும் இலங்கை மக்கள் இன்னும் அவரை நேசிக்கின்றனர் என்பதை நாம் முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளோம்.
நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தில் 5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். எனினும் அசாத் சாலி 5 ஆயிரம் மக்கள் மாத்திரமே அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்ததுடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன 212 பஸ்களில் மக்கள் அழைத்து வரப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனநிலைமையை அறிந்து கொள்ளவதில் அக்கறை செலுத்துவதை காணமுடியாதிருப்பதால், மக்களின் கையெழுத்துக்களை பெற்று எழுத்து மூலமான சாட்சியாக இந்த மகஜரில் கையெழுத்து பெற தீர்மானித்துள்ளோம். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்படாத நிலையில், பிற கட்சிகளை சேர்ந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இந்த கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ள இவர்கள் மகிந்தவை பயன்படுத்தி அரசியல் கரைசேர முயற்சிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

