பாராளுமன்றைக் கலைப்பதுதான் ஒரே வழி: ஜனாதிபதி முடிவு
பாராளுமன்றப் பெரும்பான்மையற்ற நிலையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய ஜனாதிபதி மைத்ரி – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியை எ...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_417.html?m=0

பாராளுமன்றப் பெரும்பான்மையற்ற நிலையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய ஜனாதிபதி மைத்ரி – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியை எதிர்பார்த்த வகையில் செயற்படுத்துவதற்குப் போதியளவு முயற்சி செய்த போதிலும் அதற்குத் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவதும் நல்ல திட்டங்கள் கூட போராட்டத்துக்குள்ளாகி வருவதுமான நிலையில் எதிர்வரும் வாரம் 19ம் தி.ச நிறைவேற்றப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய பாராளுமன்றத்துக்கு மக்கள் ஆணையைக் கோருவதுதான் ஒரேவழியென்பதில் ஜனாதிபதி இணக்கம் கண்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதனடிப்படையில் ஜுன் மாதம் தேர்தல் இடம்பெறும் வகையில் மே மாதம் பாராளுமன்றைக் கலைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் இணக்கம் தெரிவித்திருப்பதுடன் 100 நாள் செயற்திட்டத்தின் பலனைப் பெறும் நோக்கில் அக்கட்சி ஆரம்பம் முதலே பாராளுமன்றைக் கலைக்கும் கோரிக்கையை முன் வைத்து வந்திருந்தது. தேசிய அரசின் திட்டத்திற்கமைய ஸ்ரீலசுகட்சிக்கும் பங்கு வழங்கும் நோக்கில் அமைச்சரவையிலும் ஸ்ரீலசுக இணைத்துக் கொள்ளப்பட்ட போதும் தொடர்ச்சியாக அக்கட்சி ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்குத் தடையாக இருந்து வருவம் நிலையிலேயே ஜனாதிபதி இம்முடிவை எட்டியுள்ளார்.
இதற்கிடையில் 19ம் திருத்தச் சட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என ஜே.வி.பி தரப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை திட்டமிட்டபடி 27,28ம் திகதிகளில் விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும் என ஜனாதிபதி அக்கட்சிக்கு உறுதியளித்துள்ளதுடன் 19ஐ ஆதரிப்பதென ஸ்ரீலசுக மத்திய குழு ஏகமானதாக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கள் முழு அதிகாரத்துடன் இயங்கும் சூழ்நிலை உருவாகவுள்ள நிலையில் அதனைத் தடுப்பதில் மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைப்புடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் நல்லாட்சியை செயற்படுத்த மென்மேலும் தாமதிப்பதை விட புதிய பாராளுமன்றுக்கான மக்கள் ஆணையைக் கோருவதே யதார்த்தமானது என ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகமானவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

