வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது! வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும்!-பிரதமர் ரணில்
புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்க...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_41.html
வடக்கில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்தவும் மாணவியின் படுகொலை தொடர்பில் உண்மைகளை கண்டறியவும் விசேட பொலிஸ் குழுவினர் மற்றும் சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவியின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்துள் ளதுடன் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விவகாரம் வடக்கில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
வடக்கில் அமைதியின்மை உருவாகியுள்ள நிலையில் நாம் சட்டரீதியாக எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக பாடசாலை மாணவியின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் மக்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்க்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். பொலிசார் தமது கடைமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.
கேள்வி : வடக்கில் அமைதியின்மையை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
வடக்கில் தற்போதைய நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அதேபோல் உண்மை நிலைமைகளை கண்டறிவதற்கான விசேட பொலிஸ் குழுவொன்றும் விசேட சட்டத்தரணிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இச் சம்பவம் தொடர்பில் உண்மை நிலைமைகள் கண்டறியப்படும்
கேள்வி : எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் மீது பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனரே?
பொலிஸார் மந்த நிலையில் செயற்படுவதாக ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இதை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொலிஸார் தமது கடமையை சரியாக செய்து வருகின்றனர். யார் குற்றம் செய்தாலும் அது தொடர்பில் சட்ட முறைப்படியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடின் வடக்கில் தொடர்ந்தும் குழப்பகர சூழல் ஏற்படுவதாக அமைந்து விடும். ஆகவே யார் மீதும் வீண் பழி சுமத்தி அரசியல் நடத்தாது நிலைமைகளை உடனடியாக கட்டுப்படுத்தி சாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.